சிலேத்தாரில் உள்ள சைக்கிள் பாதை 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இரு மடங்குக்கும் அதிகமாக நீட்டிக்கப்படவுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளன.
தற்போது 4.6 கிலோமீட்டர் நீளமுள்ள அப்பாதை, சிலேத்தார் ஏரோஸ்பேஸ் டிரைவ், பொங்கோல் பாராட் டிரைவ் ஆகிய சாலைகளையும் உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமையன்று (அக்டோபர் 28) தெரிவித்தது.
மேலும், அப்பணிகள் நிறைவடைந்ததும் 11.2 கிலோமீட்டர் தூரத்திற்கு அது நீட்டிக்கப்பட்டு, சைக்கிளோட்டிகளுக்குத் தொடர்ச்சியான நீண்ட பாதையை வழங்கும்.
சைக்கிளோட்டிகள் செல்ல வேண்டிய பகுதியை அடர் நீலக் கோடுகள் குறிக்கும்.
சாலைச் சந்திப்புகள், கட்டடங்களின் நுழைவாயில்கள் அருகே புள்ளிகளிட்ட நீலக் கோடுகளும் சிவப்பு நிறக் குறுக்குக் கோடுகளும் அப்பாதையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும்.
ஞாயிற்றுக்கிழமையன்று அப்பாதை செயல்படும்போது ஓட்டுநர்களுக்கு வழிகாட்டவும் எச்சரிக்கவும் அக்கோடுகள் உதவும்.
சைக்கிளோட்டிகள் தங்களுக்கான பாதையிலேயே செல்ல வேண்டும்; போக்குவரத்துச் சமிக்ஞைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ஆணையம் நினைவூட்டியது.
பாதை செயல்படாத நேரங்களில், குழு அளவு வரம்புகள் உள்ளிட்ட நடப்பு விதிமுறைகளைச் சைக்கிளோட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள மற்றொரு தனித்துவமான சாலை சைக்கிள் பாதை, தானா மேரா கோஸ்ட் ரோட்டில் உள்ள 10 கிலோமீட்டர் நீளப் பாதையாகும்.
