முதியோர் நலம்பேணும் சன்லவ் இல்லம், இளையர்களையும் அப்பணியில் ஈடுபடுத்தி அவர்களது நலனிலும் அக்கறை கொள்கிறது.
இளையர்களின் தேவைகளை அறிந்து, முதியோர் பராமரிப்பில் அவர்களை எப்படி மேலும் ஈடுபடுத்தலாம் என்பதை அறிந்துகொள்வதற்கு கருப்பொருள்சார் கலந்துரையாடல் ஒன்றை அந்த இல்லம் அண்மையில் நடத்தியது.
அங் மோ கியோவிலுள்ள சன்லவ் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் மே 10ஆம் தேதி நடந்த அந்தக் கலந்துரையாடலில் கிட்டத்தட்ட 14 இளையர்கள் பங்கேற்றனர். அம்மாணவர்களில் பலரும் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.
இளையர் மனநலம், தனிமையுணர்வு போன்றவை குறித்துக் கலந்துரையாடியதாக அந்நிகழ்வை வழிநடத்திய தாதிமை நிர்வாகி இந்திரா எஸ்.எம் தேவன் தமிழ் முரசிடம் கூறினார்.
“இளையர்கள் என்ன விரும்புகின்றனர், என்ன எதிர்நோக்குகின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதே எங்களது நோக்கமாக இருந்தது,” என்றார் திருவாட்டி இந்திரா.
அதிகாரிகளுடனும் வர்த்தகப் பங்காளிகளுடனும் சேவையாற்றும் வாய்ப்பினைப் பெற்ற இளையர்களின் தலைமைத்துவ ஆற்றலை வளர்ப்பதற்கான வாய்ப்பையும் தங்கள் அமைப்பினர் நல்குவர் என்று அவர் கூறினார்.
இளையர்கள் சிலர், முதியோருக்காக ஜுவல் சாங்கியில் மே 17ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலாவிலும் பங்கேற்றனர்.
பல்லாண்டுகளாகவே விமான நிலையத்திற்குச் சென்றிராத மூத்தோர் மகிழ்ச்சியுடன் ஜுவல் சாங்கியின் வனப்புமிகு கூறுகளான மழைக்காட்டையும் பேரருவியையும் கண்டு மகிழ்ந்ததாக திருவாட்டி இந்திரா நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய ஒன்றுகூடல்களின்போது முதியோரும் இளையரும் ஒருவருக்கு ஒருவர் உறவாடி, தங்கள் வாழ்க்கையை வளப்படுத்தும் வாய்ப்பைப் பெறலாம் என்று சன்லவ் நிர்வாகி மகாலட்சுமி அண்ணாமலை கூறினார்.