இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் தெங்கா குடியிருப்பாளர்களுக்குப் புதிய வசதிகள்

பேரங்காடி, உணவு நிலையம் திறப்பு

2 mins read
ef266357-238a-4a3d-a1d2-7ca7f536d953
‘பிளான்டேஷன் பிளாசா’ எனும் அக்கம்பக்க நிலையம் 2024ன் இரண்டாம் காலாண்டின் இறுதியிலிருந்து அதன் செயல்பாடுகளை கட்டங்கட்டமாகத் தொடங்கும். - சித்திரிப்புப் படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

தெங்காவின் முதல் அக்கம்பக்க நிலையமான ‘பிளான்டேஷன் பிளாசா’வில் 2024ன் இரண்டாம் காலாண்டின் இறுதியில் உணவு நிலையம் ஒன்றும் பேரங்காடி ஒன்றும் திறக்கப்படும்.

அந்தப் புதிய வீடமைப்புப் பேட்டையில் வசதிகளும் பொதுப் போக்குவரத்துத் தெரிவுகளும் குறைவாக இருப்பதாகக் கூறிவரும் குடியிருப்பாளர்களுக்கு இச்செய்தி மனநிறைவைக் கொண்டுவரும்.

பத்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கும் மேல் இருக்கும் ஐந்து மாடி ‘பிளான்டேஷன் பிளாசா’வில் மொத்தம் 75 கடைகள் அமைந்திருக்கும்.

பேரங்காடி, உணவு நிலையம், சில்லறை வர்த்தகக் கடைகள், சேவைகள், பொழுதுபோக்கு ஆகியவை அவற்றில் உள்ளடங்கும்.

குடியிருப்பாளர்களின் அன்றாடத் தேவைகளுக்கான பலசேவை இடமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மற்ற உணவகங்கள், வர்த்தகக் கடைகள், அங்கு வழங்கப்படும் சேவைகள் கட்டங்கட்டமாகச் செயல்பாடுகளைத் தொடங்கும் என்றும் அது கூறியது.

தெங்காவில் முதல் தேவைக்கேற்ப கட்டப்படும் திட்டங்களான ‘பிளான்டேஷன் ஏக்கர்’சும், ‘பிளான்டேஷன் கிரேஞ்’சும் கட்டிமுடிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பெரும்பாலான கடைகள் இவ்வாண்டின் நடுப்பகுதியிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீவக தெரிவித்தது.

இவ்வாண்டின் ஜனவரி மாதம் கட்டிமுடிக்கப்பட்ட மற்றொரு தேவைக்கேற்ப கட்டப்படும் திட்டமான ‘பிளான்டேஷன் வில்லேஜ்’உடன் ஒ‘பிளான்டேஷன் பிளாசா’ ஒருங்கிணைக்கப்படும்.

புதுப்பிப்புப் பணிகளின் திட்டமிடல் குறித்து, வீவக ‘ஜயண்ட்’, ‘கொஃபூ’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதாக அதன் வீடமைப்புப் பேட்டைப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி மைக் சான் கூறினார்.

‘பிளான்டேஷன் வில்லேஜ்’இல் உள்ள வீடுகளுக்குப் பிறகு ‘பிளான்டேஷன் பிளாசா’ கட்டிமுடிக்கப்பட்டது குறித்து பேசியபோது, அந்தப் பகுதியில் உள்ள வசதிகளின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர், குடியிருப்பு வீட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்ததாக வீவக கூறியது.

வீடுகளை வாங்கியோரில் பெரும்பாலானோர் கொடுத்த கருத்துகள் காரணமாக அவ்வாறு செய்ததாக வீவக தெரிவித்தது. அவர்கள் புதுப்பிப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு வீட்டு சாவிகளை முன்கூட்டியே பெற விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்