அரசாங்கம் அடுத்த ஆண்டு வழங்கப்படவேண்டிய சமூக மன்றப் பற்றுச்சீட்டுகளை (சிடிசி) முன்கூட்டியே வழங்கியிருக்கும் நிலையில், சிங்கப்பூரில் உள்ள பேரங்காடிகளும் கூடுதல் சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளன.
சமூக மன்றப் பற்றுச்சீட்டுகளிலிருந்தோ எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளிலிருந்தோ $60 வரை செலவிடுவோருக்கு $6 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை ஃபேர்பிரைஸ் பேரங்காடி வழங்குகிறது.
அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி $60க்கு பொருள்கள் வாங்குவோருக்கு இம்மாதம் 17ஆம் தேதிவரை $6 பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்கள் 20 பற்றுச்சீட்டுகள்வரை பெற முடியும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் சொன்னது. பேரங்காடிகள் வழங்கும் அந்த $6 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை ஜூலை 31ஆம் தேதிவரை பயன்படுத்தலாம்.
ஃபேர்பிரைஸ் அத்தகைய சலுகையை மூன்றாவது முறையாக இவ்வாண்டு அறிவிக்கிறது. இதற்குமுன் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அந்தச் சலுகை நடப்பில் இருந்தது.
மேலும், ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை 500க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான விலையை அதிகரிக்கப்போவதில்லை என்று ஃபேர்பிரைஸ் ஏற்கெனவே கூறியது.
இதற்குமுன், 300 அத்தியாவசியப் பொருள்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என்று அது சொன்னது.
ஜயன்ட், கோல்ட் ஸ்டோரேஜ் ஆகிய பேரங்காடிகளுடன் சிஎஸ் ஃபிரெஷ், ஜேசன் டிலாய் ஆகிய கடைகளிலும் சமூக மன்றப் பற்றுச்சீட்டுகளிலிருந்தோ எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளிலிருந்தோ $60 வரை செலவிடுவோருக்கு $6 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். அந்தப் பற்றுச்சீட்டுகள் ஜூன் 17 வரை அல்லது இருப்பு இருக்கும்வரை வழங்கப்படும். ஜூன் 25 வரை $6 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தொடர்புடைய செய்திகள்
பிரைம் பேரங்காடி, $20 மதிப்புள்ள சமூக மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவோருக்கு ஒருசில பொருள்களை இம்மாதம் 18ஆம் தேதிவரை பாதி விலைக்கு விற்பனை செய்கிறது.

