ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் (UNESCO) தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலுக்கு சிங்கே அணிவகுப்பை முன்மொழிவதற்கு சிங்கப்பூரும் மலேசியாவும் தயாராகி வருகின்றன.
இரு நாடுகளும் மார்ச் மாதம் அவ்வாறு முன்மொழியத் தயாராகிவரும் வேளையில், இக்காலச் சிறுவர்களுக்கு இத்தகைய ஆர்வத்தை ஊட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது மக்கள் கழகம்.
பள்ளிகளில் கண்காட்சிகள், பாலர் பள்ளிப் பருவப் பிள்ளைகளுக்கான கதைப் புத்தகம், சிங்கே அணிவகுப்புக்கான மிதவைகளை வடிவமைக்கும் போட்டி எனப் பல்வேறு நடவடிக்கைகளை அது மேற்கொள்கிறது.
இந்த ஆண்டின் (2025) சிங்கே அணிவகுப்பு ஏற்பாட்டு குழுத் துணைத் தலைவர் டான் சுவீ லெங்,“சிங்கே என்பது அணிவகுப்பு மட்டுமன்று. 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து தழைக்கக்கூடிய, ஒரு வகையான வாழும் மரபுடைமை அது,” என்று கூறினார்.
சிங்கே அணிவகுப்பை ‘யுனெஸ்கோ’வின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலுக்கு மலேசியாவும் சிங்கப்பூரும் இணைந்து முன்மொழியவிருக்கின்றன. சிங்கப்பூர் இந்தப் பட்டியலுக்கு நியமனம் அனுப்புவது இது மூன்றாவது முறை.
ஏற்கெனவே சிங்கப்பூர் முன்மொழிந்ததன் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு உணவங்காடிக் கலாசாரமும் சென்ற ஆண்டு (2024) டிசம்பரில் கெபாயா உடையும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமை என்பது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் பாரம்பரியங்களைக் குறிப்பது. நிகழ்த்துகலைகள், சமூக நடைமுறைகள், கொண்டாட்ட நிகழ்ச்சிகள் போன்றவை இந்த வகையைச் சேரும்.
சிங்கப்பூரின் வைர விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகவும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான 60 ஆண்டு நல்லுறவைக் குறிக்கும் விதமாகவும் இரு நாடுகளும் கூட்டாக சிங்கே அணிவகுப்பை ‘யுனெஸ்கோ’ பட்டியலுக்கு முன்மொழியவிருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கே அணிவகுப்பு குறித்தும் இப்பட்டியலில் இடம்பெறுவதற்கான அதன் முயற்சி குறித்தும் மாணவர்களுக்குக் கூடுதலாக எடுத்துச்சொல்ல 40க்கு மேற்பட்ட பள்ளிகள் ஆர்வம் தெரிவித்திருப்பதாக மக்கள் கழகம் கூறியது.
இரண்டாம் காலாண்டில் பாலர் பள்ளி மாணவர்களுக்கான புத்தகம் வெளியிடப்படும் என்றும் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து பள்ளி விடுமுறைக் காலத்தில் வாசிப்பு நிகழ்ச்சிகளும் சாலைக் காட்சிகளும் நடத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.
2026ஆம் ஆண்டு ஜனவரியில், மெய்நிகர் சிங்கே அணிவகுப்புக்கு மிதவைகளை வடிவமைக்கும் சவால் நிகழ்ச்சி தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.