தொடர்ந்து பணியாற்ற விரும்பும் மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் உதவும் என்றும் அவர்களுக்கு மெடிசேவ் திட்டத்தில் கூடுதல் நீக்குப்போக்கை அளித்து, ஓய்வூதியத்திற்காக வீட்டின் மதிப்பை எளிதாகப் பெறுவதற்கும் வழிவகை செய்யும் என்றும் பிரதமர் கூறினார்.
மூத்தோருக்கான பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தப் பல அமைச்சுகள் பணியாற்றி வருவதாகவும் அந்த நடவடிக்கைகள் தயாரானதும் கூடுதல் விவரங்கள் பகிரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், தொடர்ந்து பணியாற்றவும் சுறுசுறுப்பாக இருக்கவும் சமூகத்திற்குத் தொடர்ந்து பங்களிக்கவும் விரும்பும் மூத்தோருக்கு அரசாங்கம் உதவும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
போதுமான மெடிசேவ் சேமிப்பு இருப்பைக் கொண்டவர்கள், தங்கள் மருத்துவச் செலவுகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்துவதில் கூடுதல் நீக்குப்போக்கைப் பெறுவர்.
மேலும், மூத்தோர் தங்களின் வீட்டில் தொடர்ந்து வசித்துக்கொண்டே, ஓய்வுக்காலத் தேவைகளுக்காக வீட்டின் மதிப்பை எளிதாகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் அரசாங்கம் வழிவகை செய்யும் என்றார் பிரதமர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு பற்றியும் திரு வோங் விவரித்தார்
மாற்றுத் திறனாளிகள் நிறைவான வாழ்க்கை வாழவும் தங்களின் திறனை வெளிப்படுத்தவும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க அரசாங்கம் மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
முதலாவதாக, பள்ளிக் கல்வியிலிருந்து பணி வாழ்க்கைக்கு மாறுவதை அரசாங்கம் எளிதாக்கும்.
இரண்டாவதாக, வேலைவாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும்.
இறுதியாக, பராமரிப்பு மற்றும் சமூக ஆதரவைப் பெறுவதற்கான வசதிகளை அரசாங்கம் மேம்படுத்தும்.
ஒற்றையரை அரசாங்கம் மறக்கவில்லை
பிரதமர் வோங் தமது உரையில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்பட்டாலும், மணமாகாத ஒற்றையர்களையும் அரசாங்கம் மறந்துவிடவில்லை என்று குறிப்பிட்டார்.
ஒற்றையரில் பலர் வயதான தங்கள் பெற்றோரைப் பராமரிப்பதிலோ அல்லது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதிலோ ஈடுபட்டுள்ளனர்.
வீடமைப்பு வசதி என்பது ஒற்றையருக்கு தொடர்ந்து ஒரு முக்கிய கவலையாக இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அவர்களுக்கான சிறந்த ஆதரவை வழங்க தற்போதைய பதவிக் காலத்திற்குள்ளேயே அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறினார்.
அதேவேளை, ஒற்றையர் பிடிஓ வீட்டு மானியம் பெறுவதற்கான வருமான வரம்பு $7,000லிருந்து $8,000ஆக அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


