இங்குள்ள சில உள்ளூர் மீன் பண்ணைகள், அதிக செலவுகளைச் சமாளிக்க தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளன.
போக்குவரத்து, தளவாடங்கள், மின்சாரம், மனிதவளச் செலவுகள் 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ‘தி ஃபிஷ் ஃபார்மர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மால்கம் ஓங் கூறினார்.
எனினும் தொழில்நுட்பம், ஊழியர்களின் திறன் மேம்பாடு மூலம் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் வழியாக விலைகளை நிலையாக வைத்திருக்க முடிவதாக அவர் சொன்னார்.
மீன் பண்ணை தொழில்துறைக்கு இது சவாலான ஆண்டாக இருந்துள்ளதாக ‘சிங்கப்பூர் அக்வாகல்ச்சர் டெக்னாலஜிஸ்’ தலைமை நிர்வாகி கருதினார்.
“உள்ளூர் தயாரிப்புகளைவிட மலேசியா, இந்தோனீசியாவிலிருந்து விலைக் குறைவான இறக்குமதிகளை வாங்கவே உணவகங்கள் முற்படுகின்றன. ஆனால், வர்த்தகம் அமோகமாக இல்லாததால் அவை குறைவாக வாங்குகின்றன. இது, எங்கள் எல்லாரையும் பாதிக்கிறது,” என்றார் அவர்.
உள்ளூர் பண்ணைகளின் உற்பத்தியைவிட அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதிகளின் விலைகள் பொதுவாக ஏறக்குறைய 30 விழுக்காடு குறைவாக உள்ளது.
இந்நிலையில், உள்ளூர் பண்ணையாளர்களிடமிருந்து வாங்குவதால் நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்று தொழில்துறை நிபுணர்கள் வலியுறுத்தினர்.
“மற்ற நாடுகள் இருப்பதைப் போன்று, சிங்கப்பூர் விவசாய நாடு இல்லை. ஆனால், உணவுப் பாதுகாப்பைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும்,” என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியேன் வர்த்தகப் பள்ளி பேராசிரியர் டாக்டர் கெவின் சியோங்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 பெருந்தொற்றின்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் சொன்னார். சிங்கப்பூர் அதன் உணவுத் தேவையில் 90 விழுக்காட்டுக்குமேல் இறக்குமதி செய்வதால், அப்போது உணவுப் பாதுகாப்பு முக்கிய அம்சமாக உருவெடுத்தது.

