இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு தங்குமிடம் அல்லது வேலை கொடுத்ததற்காக அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, கைதானோர் எண்ணிக்கை 31.6 விழுக்காடு அதிகரித்துள்ளதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்தப் போக்கு கவலையளிப்பதாகக் கூறிய குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியது.
குடிநுழைவுக் குற்றவாளிகளில் பெரும்பாலானோர், காலாவதியான அல்லது ரத்து செய்யப்பட்ட வேலை அனுமதி அட்டையை வைத்திருப்பவர்கள். அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, சட்டவிரோதமாக இங்கு தங்கினர். அந்தக் காலகட்டத்தில், அவர்களில் சிலர் இங்கு சட்டவிரோதமாக வேலை செய்தனர்.
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை குடிநுழைவு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 166 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அத்தகைய குற்றவாளிகளை வேலைக்கு அமர்த்தியதற்காக 138 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.
2023ன் இதே காலகட்டத்தில் இத்தகைய குற்றங்களுக்காக 231 பேர் கைது செய்யப்பட்டனர். 2022ல் குடிநுழைவு குற்றவாளிகளுக்குத் தங்குமிடம் அளித்து, வேலையில் அமர்த்தியதற்காக மொத்தம் 226 பேர் கைதாகினர்.
பல சம்பவங்கள் பொதுமக்கள் அளித்த தகவல், ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையத்தின் உளவுப் பிரிவின் துணை பொறுப்பதிகாரி ஆய்வாளர் மார்க் சாய் கூறினார்.
2024ல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட அவர், “இந்தப் போக்கு ஆபத்தானது. குடிநுழைவுக் குற்றவாளிகள் இங்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தங்குமிடம், வேலை கொடுப்போர், அவர்கள் சட்டப்படி இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தத் தவறினால் அது பாதுகாப்பு அச்சுறுத்தலாகக்கூடும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஆணையம் மாதந்தோறும் கிட்டத்தட்ட 60 உளவுத்துறை தலைமையிலான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அவற்றில் பல, சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் பிரச்சினையைக் கையாள்பவை.
குடிநுழைவு குற்றவாளிகளுக்குத் தங்குமிடம் அல்லது வேலை கொடுப்போருக்கு 24 மாதங்கள் வரை சிறை, $6,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

