தாதிமை இல்லங்கள் சீர்திருத்தங்களைச் செய்ய திடீர்ச் சோதனைகள் அவசியம்: டான் கியட் ஹாவ்

தாதிமை இல்லங்கள் சீர்திருத்தங்களைச் செய்ய திடீர்ச் சோதனைகள் அவசியம்: டான் கியட் ஹாவ்

2 mins read
3177d249-fca4-44f3-a5bc-7c2065e3e3b7
பாசிர் பாஞ்சாங் ரோட்டில் உள்ள விண்ட்சர் கான்வலசென்ட் இல்லம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாதிமை இல்லங்கள், தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதை உறுதிசெய்ய திடீர்ச் சோதனைகள் அவசியம் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கூறியிருக்கிறார்.

அவை மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் அத்தகைய சோதனைகள் முக்கியம் என்றார் அவர்.

இருப்பினும் குறைபாடுகளைத் துடைத்தொழிப்பதும் அவை மீண்டும் நிகழாமல் தடுப்பதும் சாத்தியமற்றது என்று திரு டான் கூறினார். வழக்கமான தணிக்கைகள், சிறப்பு மறுஆய்வுகள், சோதனை நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு நடத்துவதாக அவர் சொன்னார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சருமான திரு டான் அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.

வழக்கமான பணிகளுக்கு அப்பாற்பட்ட தணிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவற்றின் நோக்கம். இந்த அணுகுமுறை, இல்லங்களில் உள்ள குறைபாடுகளும் தவறுகளும் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டுச் சரிசெய்யப்படுவதை உறுதி செய்வதாகத் திரு டான் கூறினார்.

தாதிமை இல்லங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை வலுப்படுத்தும் திட்டம் ஏதும் உள்ளதா என்று பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவ்சி கேட்டிருந்தார். விண்ட்சர் கான்வலசென்ட் இல்லத்தில் கண்டறியப்பட்டதை போன்ற தவறுகள் வேறு இல்லத்தில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அத்தகைய திட்டம் உள்ளதா என்று அவர் வினா எழுப்பியிருந்தார்.

அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் தாதிமை இல்லங்களில் பெரும்பாலானவை போதிய அளவுக்குத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதாகவும் திரு டான் சொன்னார்.

இருப்பினும் குறைபாடுகள் கடுமையாக இருந்தால் அமைச்சு அதன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியிருக்கும் என்று அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்