அப்பர் புக்கிட் தீமாவிலுள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியாரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 வயது சிங்கப்பூரர் பஸ்நாயக கீத் ஸ்பென்சர், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) பிற்பகல் 3 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
நவம்பர் 9ஆம் தேதி நடந்த அத்தாக்குதலில், பஸ்நாயக மடக்குக் கத்தியால் பாதிரியார் கிரிஸ்டஃபர் லீயின் வாயில் குத்தியதாகக் கூறப்படுகிறது.
அதனால், பாதிரியாரின் நாக்கில், உதட்டில், வாயின் ஓரத்தில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாதிரியார் தற்போது இல்லத்தில் குணமடைந்து வருகிறார்.
இது குறித்த விசாரணைக்காக பஸ்நாயக சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கை, கால் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை காரிலிருந்து பஸ்நாயக இறக்கப்பட்டார். அவரது நெற்றியின் வலது புறத்தில் ரோமன் எண்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அவரது கழுத்திலும் கால்களிலும் பச்சை குத்தப்பட்டிருந்தன.
பஸ்நாயக காரைவிட்டு இறங்கியதும் அவரைச் சுற்றி நான்கு காவல்துறை அதிகாரிகள் நிற்க, அதிகாரி ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
பின்பு இரு அதிகாரிகள், அவர் கையைப் பிடித்தவாறு தேவாலயத்தின் வழிபாட்டு இடத்திற்குச் செல்ல படிகளில் அழைத்துச் சென்றனர்.
அவர் உள்ளே நுழைந்ததும், பின்வரிசையில் ஓர் இருக்கையை சுட்டினார். அவர் கூறியதை காவல்துறையினர் குறிப்பு எடுத்துக்கொண்டனர்.
பின்பு, அவர் நடைபாதையைக் கடந்து நடந்தபோது, காவல்துறையினர் அவரை நிறுத்தி மேலும் சில கேள்விகளைக் கேட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முதலில் சுட்டிய இருக்கையை அவர் மீண்டும் காட்ட, காவல்துறையினர் அவரைத் திரும்ப அங்கு அழைத்துச் சென்று மேலும் விசாரித்தனர்.
அதன் பின்னர், பஸ்நாயக கத்திக்குத்து நடந்த இடத்திற்கு (பிரார்த்தனைப் பீடத்திற்குமுன்) அழைத்துச் செல்லப்பட்டார். பாதிரியார் திருவிருந்து (Holy Communion) வழங்கிக்கொண்டிருந்தபோது பஸ்நாயக அவரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
நவம்பர் 9ஆம் தேதி கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததும், பஸ்நாயகவைத் தேவாலயத்தின் அவசர உதவிக்குழு கட்டுப்படுத்தி, அருகிலிருந்த ஓர் அறைக்கு அவரை அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி விசாரணையிலும் அந்த அறைக்கு அவர் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
பின்பு, கட்டடத்தைவிட்டு வெளியேறிய பஸ்நாயக, பின்புறத்திலுள்ள கார் நிறுத்துமிடத்தைக் காவலர்களிடம் காட்டி தகவல் சொன்னார். தொடர்ந்து, அவர் மீண்டும் காரில் ஏறி தேவாலயத்திலிருந்து கிளம்பினார்.
இந்நிலையில், தேவாலயம் தனது பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தி வருவதாக செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் வழிபடுவோருக்கு அனுப்பப்பட்ட செய்தி மடலில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் லாரன்ஸ் வோங், சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் உள்ளிட்ட அமைச்சர்களும் சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத் தலைவர் பாதிரியார் வில்லியம் கோவும் பல்வேறு சமய அமைப்புகளும் இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தனர்.

