கம்போடிய மோசடிக் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகம்: சிங்கப்பூரர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
23c3ec16-9f45-4f29-93a8-b193e86b4104
வேய்ன் சோ யூ சென் (இடம்), பிரையன் சீ எங் ஃபா இருவரும் கம்போடியாவிலும் தாய்லாந்திலும் அந்நாடுகளின் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

கம்போடிய மோசடிக் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரர்கள் இருவர் மீது திங்கட்கிழமை (நவம்பர் 17) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருவரில் ஒருவர் கம்போடியாவிலிருந்தும் மற்றவர் தாய்லாந்திலிருந்தும் நாடு கடத்தப்பட்டனர்.

27 வயது வேய்ன் சோ யூ சென், 32 வயது பிரையன் சீ எங் ஃபா இருவரும் காணொளி வழியாக நீதிமன்ற விசாரணையில் பங்கெடுத்தனர். திட்டமிட்ட குற்றச் சட்டத்தின்கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இருவரும் மோசடிக் கும்பலுடன் சேர்ந்து 438 சம்பவங்களில் பலரை ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் ஏமாந்தவர்கள் $41 மில்லியனைப் பறிகொடுத்தனர்.

அந்த ஆடவர் இருவரும் கம்போடியாவில் இவ்வாண்டு (2025) செப்டம்பர் 9ஆம் தேதி அல்லது அதனையொட்டிய காலத்தில் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

அவர்கள் தொலைபேசி நிலையத்திலிருந்து பலரை அழைத்து மோசடி செய்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரியவந்தது

சிங்கப்பூரில் இருப்போரைக் குறிவைத்து அவர்கள் அரசாங்க அதிகாரிகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் நோம் பென்னைத் தளமாகக் கொண்ட மோசடிக் கும்பலுக்காகச் செயல்பட்டதாய்த் தெரிகிறது. சிங்கப்பூர்க் காவல்துறை தேடிவந்த 34 சந்தேக நபர்களில் அவர்களும் அடங்குவர்.

சோவும் சீயும் கம்போடிய, தாய்லாந்துக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. அன்றே சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட அவர்கள், இங்குக் கைதுசெய்யப்பட்டனர்.

இன்னும் 25 சிங்கப்பூரர்களும் ஏழு மலேசியர்களும் தேடப்பட்டு வருகின்றனர்.

திட்டமிட்ட குற்றச் சட்டத்தின்கீழ், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் குற்றவாளிக்கு ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனையோ $100,000 அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்