சட்டவிரோதமாகப் பிறரின் முகவரிகளை மாற்றியதாக சந்தேகம்: எழுவர் கைது

2 mins read
94c3cd12-a0b4-4cd4-83a9-610cecae61ce
கோப்புப் படம்: - சாவ்பாவ்

சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் (ஐசிஏ) இணையச் சேவையைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பிறரின் வீட்டு முகவரிகளை மாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19லிருஐந்து 32 வயதுக்கு உட்பட்ட ஆடவர் அறுவரும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் இணையச் சேவை பிறரின் வீட்டு முகவரிகளை மாற்ற 80 முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்று கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி 11) முதலில் தெரிவிக்கப்பட்டது. கைதான எழுவரும் அவற்றில் குறைந்தது 30ல் ஈடுபட்டவர்கள் என நம்பப்படுகிறது.

தனது இணையச் சேவையைப் பயன்படுத்தி 80 முறை பிறரின் வீட்டு முகவரிகளை மாற்ற முயற்சி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாக சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்திருந்தது. தனது இணையச் சேவை மொத்தம் 87 முறை சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவற்றில் 69 முறை குற்றவாளிகளின் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது என்றும் திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) ஆணையம் வெளியிட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்டது.

வெற்றிகரமாக முடிந்த முயற்சிகளில் குற்றவாளிகள், 17 சிங்பாஸ் கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ஆணையம் தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரை காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவையும் உளவுப் பிரிவையும் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவு முழுவதும் சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் காவல்துறை கூறியது.

கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் சட்டவிரோதமாகப் பயன்பாட்டு அனுமதி விவரங்களை (access codes) வெளியிட்டதன் தொடர்பில் அறுவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றொருவர் மீது அதே சட்டத்தின்கீழ் மறைச்சொற்கள், பயன்பாட்டு அனுமதி விவரங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக வெளியிட்டதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்