குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிம் அட்டைகளைப் பெற்றுத்தர போலியான நிறுவனங்களைப் பதிவுசெய்ததாக நம்பப்படும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஏழு பேர் ஆண்கள், ஒருவர் பெண். அவர்கள் 22லிருந்து 56 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று காவல்துறை சொன்னது. இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை தீவெங்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது சந்தேக நபர்கள் கைதாகினர்.
சிம் அட்டைகளுக்குப் பதிவுசெய்யும் போலி நிறுவனங்களைக் குறிவைத்து மோசடி எதிர்ப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவ்வாறு பெறப்பட்ட சிம் அட்டைகள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
தொடக்கக் கட்ட விசாரணையில் 90லிருந்து 480 சிம் அட்டைகளைப் பதிவு செய்ததற்காகக் கைதான சந்தேக நபர்களுக்கு $500லிருந்து $1,700 வரை பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிக அளவில் சிம் அட்டைகளை வாங்குவதற்காகப் போலி நிறுவனங்களை அமைக்கும்படி சந்தேக நபர்களிடம் கூறப்பட்டதாகத் தெரிகிறது. அந்த அட்டைகளை அவர்கள் பிறகு குற்றக் கும்பலிடம் கொடுத்துவிடுவர்.
அந்தக் குற்றக் கும்பல்கள் போலியாகப் பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டைகளை மோசடிகள் போன்ற குற்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்.
குற்றச் செயல்களுக்காக சிம் அட்டைகள் பதிவுசெய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபர்களுக்கு அதிகபட்சம் மூவாண்டு சிறைத் தண்டனை, $10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.