சிராங்கூன் நார்த்தில் உள்ள அல்-இஸ்திகாமா பள்ளிவாசலில் சந்தேகத்திற்குரிய பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அனைத்துச் சமய மன்றம் (ஐஆர்ஓ) தெரிவித்துள்ளது.
அல்-இஸ்திகாமா பள்ளிவாசலில் புதன்கிழமை (செப்டம்பர் 24) அந்தப் பொட்டலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளிவாசலிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்பொட்டலத்தில் பன்றி இறைச்சி என நம்பப்படும் இறைச்சி இருந்தது கண்டறியப்பட்டது.
வியாழக்கிழமை ஃபேஸ்புக் பதிவில், சிங்கப்பூரில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும், அல்லது சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் கடுமையாக எதிர்ப்பதாக ஐஆர்ஓ கூறியது.
“ஒரு சமயத்திற்கு எதிரான செயல், அனைத்துச் சமயங்களுக்கும் எதிரான செயலாகும்,” என்று அரசு சாரா அமைப்பான அது சொன்னது.
சிங்கப்பூரின் பள்ளிவாசல்கள், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள், அமைதி, தியானம், கூட்டு வழிபாட்டில் ஈடுபடுவோருக்குத் தொடர்ந்து பாதுகாப்பான, அமைதியான இடங்களாக இருக்க வேண்டும் என்று ஐஆர்ஓ கூறியது.
“நாங்கள் எங்கள் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுடன் ஒன்றுபட்டு நிற்கிறோம். மேலும், நமது பல கலாசார சமுதாயத்தில் தொடர்ந்து அமைதிக்கும் நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்திக்கிறோம்,” என்றும் அது மேலும் கூறியது.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தால் (முயிஸ்) தயாரிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை தொழுகையின்போது அல் இஸ்திகாமா பள்ளிவாசலிலும் சிங்கப்பூரில் உள்ள பிற பள்ளிவாசல்களிலும் வழங்கப்பட்ட பிரசங்கங்களில், சமூகத்தினர் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு முஸ்லிம் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.
சமூக ஒற்றுமையையும் சமய நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்கான நினைவூட்டல்களாக இதுபோன்ற சம்பவங்கள் விளங்குவதாக அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் குறித்து ஊகிப்பதையும் வதந்திகளைப் பரப்புவதையும் தவிர்க்குமாறு கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அறிவுறுத்தியது.
அமைதி காக்கவும் வழக்கம்போல் பிரார்த்தனைகளைத் தொடரவும் அல் இஸ்திகாமா பள்ளிவாசல் தலைமைத்துவம் அறைகூவல் விடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
அல்-இஸ்திகாமாவிலும் பிற பள்ளிவாசல்களிலும் நடந்த அண்மையச் சம்பவங்களை சீக்கியர் ஆலோசனை மன்றமும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்த அது, முஸ்லிம் சமூகத்துடன் தான் ஒன்றுபட்டு நிற்பதாகக் கூறியது.