அல் இஸ்திகாமா பள்ளிவாசலில் சந்தேகத்திற்குரிய பொட்டலம் விநியோகம் செய்யப்பட்டது குறித்து பொய்த் தகவலைப் பரப்பவேண்டாம் என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்தத் துணையமைச்சருமான ஃபைஷால் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகாரிகளின் விசாரணை தொடர்வதால் அவ்வாறு செய்யவேண்டாம் என்றார் துணைப் பேராசிரியருமான திரு ஃபைஷால்.
சிராங்கூன் நார்த் அவென்யு 2ல் அமைந்துள்ள அல் இஸ்திகாமா பள்ளிவாசலுக்குப் புதன்கிழமை (செப்டம்பர் 24) சந்தேகத்திற்குரிய பொட்டலம் ஒன்று வந்தது.
அந்தப் பொட்டலத்தில் அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து பள்ளிவாசல் வழக்கம்போல செயல்படும் என்று பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
மூச்சுத்திணறல் காரணமாக செங்காங் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ஊழியரையும் நேரில் சென்று சந்தித்ததாகப் பேராசிரியர் ஃபைஷால் சொன்னார்.
அந்தப் பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாகவும் உடல்நலனில் கவனம் செலுத்தும்படி அவரிடம் அறிவுறுத்தியதாகவும் டாக்டர் ஃபைஷால் தெரிவித்தார்.
“நமது பள்ளிவாசல்கள் தொழுகைக்கும் சமூகத்துக்கும் தொடர்ந்து பாதுகாப்பான இடமாக இருக்கும்,” என்று முஸ்லிம் சமூகத்தினருக்கு அவர் உறுதிகூறினார்.
“முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமல்லாது பிற சமயத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர்களும் சம்பவம் குறித்து அக்கறையாக விசாரித்தது நெகிழ்ச்சியளித்தது,” என்றார் பேராசிரியர் ஃபைஷால்.
தொடர்புடைய செய்திகள்
நமக்கிருக்கும் உறுதியான, ஒருங்கிணைந்த சமூகத்திற்கு இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டல் என்ற அவர், அதைப் பாதுகாத்துப் பத்திரப்படுத்தவேண்டும் என்றார்.
அல் இஸ்திகாமா பள்ளிவாசலில் இருந்த பொட்டலம் குறித்து மாலை 5.20 மணிக்கு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தோர் பள்ளிவாசலிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.