செவிப்புலன் குன்றியவர்கள், மதியிறுக்கத்துக்கு ஆளானோர் போன்ற 30க்கும் மேற்பட்ட உடற்குறையுள்ளோரை எஸ்யுஎஸ்எஸ் (SUSS) எனும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் பகுதிநேர ஊழியர்களாக வேலைக்கு எடுத்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு நீடிக்கவுள்ள புதிய திட்டத்தின்கீழ் அவர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.
குறைவான ஆதரவு தேவைப்படும் சிறப்புத் தேவையுடையோருக்கு மின்னிலக்க விளம்பரம் (digital marketing) போன்ற பிரிவுகளில் வேலை அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் உதவி தேவைப்படும் எஞ்சிய 30 பேருக்கு அன்பளிப்புப் பைகளைக் கட்டுவது, நன்றி தெரிவிக்கும் அட்டைகளை வடிவமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் முதல் இம்மாதம் வரை நீடிக்கும் இத்திட்டத்தின் மூலம் உடற்குறையுள்ளோரை வேலைக்கு எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள், சவால்கள் ஆகியவற்றை ஆராய்வது நோக்கமாகும். அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கும் புதிய வேலை வாய்ப்புத் திட்டம் எஸ்யுஎஸ்எஸ்ஸின் மனிதவள மற்றும் நீடித்த நிலைத்தன்மை அலுவலகங்களால் தொடங்கப்பட்டது.
தங்கள் வளாகத்தில் அனைவரையும் உள்ளடக்கும் போக்கை ஊக்குவிப்பது உட்பட நீடித்த நிலைத்தன்மை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எஸ்யுஎஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
‘நைல்’ எனப்படும் ‘அனைவரையும் உள்ளடக்கும் வாழ்நாள் கற்றலுக்கான இணைப்புப் புள்ளி’ ஆய்வுக் குழுவையும் எஸ்யுஎஸ்எஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவிருக்கிறது. அதன்கீழ், வாழ்நாள் கற்றல், சிறப்புத் தேவையுடையோர், மூத்தோர், முன்னாள் குற்றவாளிகள் ஆகியோரை வேலைக்கு எடுத்து அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையைப் பின்பற்றுவது ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றை ஊக்குவிக்கும் பணிகளை எஸ்யுஎஸ்எஸ் ஊழியர்கள் எட்டுப் பேர் மேற்கொள்வர்.
அந்த ஊழியர்கள், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புதிய ஆய்வுக் குழுவின் தொடர்பில் எஸ்யுஎஸ்எஸ், சமூக சேவை அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்குழுவை வழிநடத்தும் இணைப் பேராசிரியர் லிம் லீ சிங் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் உள்ள குறைபாடுகளின் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக எஸ் ஆர் நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளியின் துறைத் தலைவரான அவர் குறிப்பிட்டார்.