சிங்கப்பூர் அணுகுமுறையில் சட்டம் என்பது உரிமைகளைப் பாதுகாக்கும் கேடயம் மட்டுமன்று, அனைவருக்கும் நன்மை பயக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கான அடிநாதம் என்று சட்ட மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) மாலை நடைபெற்ற 37வது வருடாந்தர சட்ட மறுஆய்வு சஞ்சிகையின் விரிவுரை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு முரளி, சிங்கப்பூரின் சட்டத்துறையின் 200 ஆண்டுகாலப் பயணத்தின் பிரதிபலிப்பு, சட்டத்தின் நோக்கம் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சருமான அவர், தம் உரையின்போது சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் எனும் அறத்துடன் திகழும் சட்டத்துறையின் அடிநாதமாக இயங்கிவரும் முக்கியக்கூறுகள் குறித்து விவரித்தார்.
‘‘சிங்கப்பூரில் கடந்த 60 ஆண்டுகளில், சட்டம் என்பது குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கான ஒரு நடைமுறைக் கருவியாக உருவெடுத்துள்ளதைக் கண்டுள்ளோம். அவ்வகையில், சிங்கப்பூர் அணுகுமுறையில் சட்டத்தின் ஆட்சி என்பது தன்னிச்சையான, விருப்புவெறுப்பு சார்பான போக்கிற்கு எதிரான ஒரு கேடயம் மட்டுமன்று.
‘‘அது பொதுநலனை மேம்படுத்துவதற்கும் சமூகத்திற்குப் பயனளிப்பதற்கு வழிவகுக்கும் வாளாகவும் திகழ்ந்துள்ளது,’’ என்றார் திரு முரளி.
மேலும், சட்டத்தின் ஆட்சியானது நடைமுறையில் சாத்தியப்படுவதும் விளைவுகள்மீது கவனம் கொண்டதுமாக இருப்பது அவசியம் என்பதை குறிப்பிட்ட அமைச்சர், ‘‘சட்டத்தின் ஆட்சி என்பது நல்ல வேலைகள், சமூக நல்லிணக்கம் மற்றும் பொதுப் பாதுகாப்பு உள்ளிட்ட உறுதியான முடிவுகளை உருவாக்க வேண்டும்.
‘‘அதன்வழி எளிய சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையின் அனுபவமாகவும் அது இருக்க வேண்டும்,’’ என்றும் சொன்னார்.
பொருளியல் முன்னேற்றம், இன, சமய நல்லிணக்கம், சட்டத்தை அணுகுவதற்கான நுழைவாயில் எனச் சிங்கப்பூரின் மேம்பாடு மற்றும் வெற்றி சார்ந்த அத்தியாயத்தில் சட்டத்தின் ஆட்சி இன்றியமையாத அங்கமாக இருந்துவருவதாகச் சுட்டிய திரு முரளி, ‘‘சட்டத்தின் ஆட்சிமீது சிங்கப்பூர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, நம் தேசத்தின் பொருளியல் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது,’’ என்றும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் நவீன சட்ட அமைப்பின் இருநூறாவது ஆண்டு நிறைவான ‘எஸ்ஜி சட்டத்துறை200’ஐ முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் ‘எஸ்ஜி சட்டத்துறை200’ இளையர் மன்றம் எனும் நிகழ்ச்சி மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சட்டத்துறையின் பயணத்தைக் கொண்டாடும், அவற்றை விளக்கும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு சிங்கப்பூரர்களுக்குத் திரு முரளி அழைப்பு விடுத்துள்ளார். சட்ட அமைச்சு, அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம், சிங்கப்பூர் சட்டக் கழகம் உள்ளிட்ட சட்ட அமைப்பின் பல்வேறு பங்காளிகள் இணைந்து அந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளன.

