‘தப்லா!’ 18வது ஆண்டு நிறைவையொட்டி தலைமைத்துவ உரையாடல் தொடர்

‘தப்லா!’ 18வது ஆண்டு நிறைவையொட்டி தலைமைத்துவ உரையாடல் தொடர்

படம்: பே.கார்த்திகேயன்

22 Oct 2026 - 6:58 pm

2 mins read

இந்தியாவில் உள்ள எண்ணற்ற விதிமுறைகளால் எழும் சவால்களையும் சிக்கலான வணிகச் சூழலையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்துப் பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் சிங்கப்பூரின் இந்திய வணிகத் தலைவர்கள் புதன்கிழமை மாலை (அக்டோபர் 21) நடைபெற்ற முதலாவது ‘தப்லா!’ உரையாடல் தொடரில் ஒன்றுகூடினர்.

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் முன்னணி ஆங்கில வார இதழான ‘தப்லா!’வின் 18வது ஆண்டு நிறைவை ஒட்டி, ‘தப்லா! தலைமைத்துவ உரையாடல் தொடர்’ என்னும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினராக வெளியுறவு, எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் பங்கேற்றார்.

‘தப்லா!’ வார இதழின் மேற்பார்வை ஆசிரியர் த.ராஜசேகர் நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

“முன்னணி வணிகப் பேராளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர, வளர்ந்துவரும் தொழில்முனைவோரை முன்னிலைப்படுத்த, வணிக வளர்ச்சியைப் பதிவுசெய்ய, சமூகத்திற்குள் இருக்கும் புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாண்புகளை எடுத்துரைக்க ‘தப்லா!’ வில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘பிஸ்னஸ்’ பகுதியோடு இந்த உரையாடல் மிக அழகாகப் பொருந்திப்போகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் (சிக்கி) தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் மேனன், ‘தப்லா!’ உடனான இந்த இணைப்பை வரவேற்றார்.

முதன்முறையாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல், இந்தியாவில் தனது பரந்த பொருளியல் மற்றும் பலதுறை வணிகத் தொடர்புகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான வர்த்தக, தொழிற்சபையின் முன்னுரிமை இலக்கை வலியுறுத்துகிறது என்றார் அவர்.

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக வளர்ந்து வருவதாகவும் அரசாங்க அளவில் மேலும் பலவற்றைச் செய்ய விருப்பம் உள்ளதாகவும் துணை அமைச்சர் கான் தமது உரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்-இந்தியா வணிகத்தையும் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வு ‘தப்லா!’, ‘சிக்கி’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

துணை அமைச்சர் கானுடன் ‘சிக்கி’ நிர்வாகக் குழு உறுப்பினரும் சிஎஸ்டி வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு இயக்குநருமான சஞ்சய் சந்திரன் சந்துருவும் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

கலந்துரையாடலை ‘தப்லா!’ஆசிரியர் வெங்கா சுப்ரமணியம் நெறிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்