மணிலா: சிங்கப்பூரைச் சேர்ந்த சில சுகாதார நிலையங்களுடன் பிலிப்பீன்சின் டகீக் நகரம் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
டகீக் நகர மக்களுக்காக சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
டகீக் நகர மேயர் லானி கயெடானோ, கேர்ஸ்பேன் ஏஷியா நிறுவனரும் தலைவருமான நொநோய் கொலேகோ, தெமாசெக் அறநிறுவனத்தின் சுகாதார, கல்வி நிர்வாக வாரியத்தின் தலைவர் ஜெனி சுவா, சிங்ஹெல்த் டியூக்-சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மகப்பேறு, குழந்தை சுகாதார ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குநரான பேராசிரியர் ஃபேபியன் யாப் ஆகியோர் பொனிஃபாசியோ குளோபல் சிட்டியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
டகீக் நகரில் மகப்பேறு, குழந்தை சுகாதாரச் சேவைகளை மேம்படுத்த அந்நகரமும் தெமாசெக் அறநிறுவனமும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையும் இணைந்து பல்வேறு திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சுகாதாரக் குறியீடுகள், உள்கட்டமைப்புத் திட்டமிடுதல், டகீக் நகரின் மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார நிலையங்களைக் கட்டுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த இந்தப் பங்காளித்துவம் கைகொடுக்கும் என்று மேயர் கயேடானோ கூறினார்.
பயிற்சி மற்றும் கல்வி சார்ந்த பரிமாற்றங்கள், சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்துவது, கூட்டு அறிவியல் நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.
கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வுத் திட்டத்தின்கீழ், தனது மேம்படுத்தப்பட்ட பராமரிப்புத் தளத்தை டகீக் நகரம் பயன்படுத்த கேர்ஸ்பேன் நிறுவனம் அனுமதிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
மின் மருத்துவப் பதிவுகள் முறை, தொலைத்தொடர்பு வாயிலான மருத்துவ சேவை ஆற்றல் ஆகியவற்றை இத்தளம் கொண்டுள்ளது.
இதன்மூலம் டகீக் நகரைச் சேர்ந்த ஏறத்தாழ 350,000 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தளம் டகீக் நகரின் சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் தெமாசெக் அறநிறுவனம் S$2.12 மில்லியன் நிதி உதவி வழங்குகிறது.

