தைவானின் புதிய தைச்சுங் பெருவிரைவு ரயில் சேவை நீலப் பாதையில் (Taichung mass rapid transit Blue line) ரயில் சேவை வழங்குவதற்கான ஒப்பந்தம் எஸ்டி என்ஜினியரிங் குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
1.4 பில்லியன் வெள்ளி மதிப்பிலான அந்த ஒப்பந்தம் எஸ்டி என்ஜினியரிங் குழுமத்தின் நகர்ப்புறத் தீர்வுகள் பிரிவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தைச்சுங் நகர அரசாங்கத்தின் பெருவிரைவு ரயில் கட்டமைப்புப் பிரிவு இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
இந்த ஏற்பாடு அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், தென்கொரிய ரயில்வே தயாரிப்பு நிறுவனமான ஹியுண்டாய் ரோட்டம், தைவானிய கட்டுமானப் பொறியியல் நிறுவனமான சிடிசிஐ (CTCI) ஆகியவை இடம்பெற்றுள்ள ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாகும். அந்நிறுவனங்கள் தைச்சுங் பெருவிரைவு ரயில் சேவை நீலப் பாதைக்கான சமிக்ஞை முறை, மின்சார விநியோக முறை போன்றவற்றை அமைத்துத் தரும்.
எஸ்டி என்ஜினியரிங் குழுமத்தின் நகர்ப்புறத் தீர்வுகள் பிரிவு, ஒட்டுமொத்தப் பணிகளை நிர்வகிக்கும். ரயிலுக்குத் தேவையான மின்சாரப் பொருள்களை வழங்குவது போன்ற பணிகளையும் அப்பிரிவு மேற்கொள்ளும்.
இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்டி என்ஜினியரிங் தைவானில் மேற்கொள்ளும் பணிகள் அதிகரித்துள்ளன.