சிங்கப்பூரின் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் மூன்றையும் காட்டும் ‘சன்னல்’ ஒன்றில் பார்வையாளர்கள் படமெடுத்துக்கொண்டு தேசத்தின் வருங்காலத்துக்குத் தங்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்தலாம்; அதேநேரம், நன்கொடை அளிக்கலாம்.
ஆர்ச்சர்ட் நூலகத்தில் ‘எஸ்ஜி60 ஹார்ட்&சோல் எக்ஸ்பீரியன்ஸ்’ (SG60 Heart&Soul Experience) எனும் தேசியக் கண்காட்சி இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதை முன்னிட்டு ‘காலத்தின் சன்னல்கள்’ (விண்டோஸ் ஆஃப் டைம்) எனப்படும் படமெடுக்கும் கூடங்கள் ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கடைத்தொகுதியின் முதல் தளத்தில் தினமும் காலை ஒன்பது மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் பொங்கோல் மற்றும் ஜூரோங் வட்டார நூலக நுழைவாயில்களில் தினமும் காலை 10 மணி முதல் இரவு ஒன்பது மணி வரைக்கும் இயங்கும். பொது விடுமுறை நாள்களுக்கு இது பொருந்தாது.
அதேபோல், மிடில் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கட்டடத்தின் முக்கிய வளாகத்தில் தினமும் காலை எட்டு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை படமெடுப்புக் கூடங்களைப் பயன்படுத்தலாம். திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை இந்தப் படமெடுப்புக் கூடங்களை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இக்கூடங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு படத்துக்கும் பந்தயப்பிடிப்புக் கழகமும் சிங்கப்பூர் பூல்ஸ் அமைப்பும் ஒரு வெள்ளித் தொகையை நன்கொடையாக வழங்கும். மொத்தத் தொகை 500,000 வெள்ளியைத் தாண்டாது.
இவ்வாறு திரட்டப்படும் தொகை சமூக உண்டியலின் மூலம் நான்கு நன்கொடை அமைப்புகளுக்கு வழங்கப்படும். ‘சில்ட்ரன்ஸ் எய்ட்ஸ் சொசைட்டி’, ‘கிளப் ஹீல்’, ‘மைன்ட்ஃபுல் கம்யூனிட்டி’, சிங்கப்பூர் மனநலகச் சங்கம் ஆகியவை அந்த நான்கு நன்கொடை அமைப்புகளாகும்.

