ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இந்தோனீசிய வர்த்தகத் தலைவரை அவரது தாய்நாட்டிடம் ஒப்படைப்பது குறித்து தீர்மானிக்கும் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
ஜின் தியென் போ என்று அறியப்படும் போலஸ் டானொஸ் என்ற ஆடவரின் வழக்கு திங்கட்கிழமை (ஜூன் 23) சிங்கப்பூரில் விசாரிக்கப்படுகிறது.
குற்றவாளிகளைச் சொந்த நாட்டுக்கு அனுப்புவது தொடர்பில் இந்தோனீசியாவுடன் செய்யப்பட்ட உடன்பாட்டின்கீழ் இடம்பெறும் முதல் வழக்கு விசாரணை அது.
இந்தோனீசிய அரசாங்கம் வழங்கும் மின்னிலக்க அடையாள அட்டை அல்லது இ-கேடிபி (e-KTP) திட்டம் தொடர்பான மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டை 70 வயது டானொஸ் எதிர்கொள்கிறார். அதனால் இந்தோனீசிய அரசாங்கத்துக்கு ஏறக்குறைய 2.3 டிரில்லியன் ரூப்பியா (S$187 மில்லியன்) இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தோனீசியாவிலிருந்து தப்பி, 2017ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் தங்கி வருவதாக நம்பப்படும் டானொஸ் இந்தோனீசியச் சட்டத்தின்கீழ் ஓர் ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். அதற்கு அதிகபட்சமாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும்.
சிங்கப்பூரில் நடைபெறும் வழக்கின் பெரும்பகுதி டானொஸ் எதிர்நோக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்யும். அதன் மூலம் அவர் இந்தோனீசியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்று தீர்மானிக்கப்படும்.
இந்தோனீசிய அதிகாரிகள் சமர்ப்பிக்கும் சாட்சியங்களை சிங்கப்பூர் வழக்கின் ஆதாரமாகக் கொள்ளும் என்று துணை அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
பிடி சன்டிபாலா அர்தபுத்ரா (PT Sandipala Arthaputra) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார். அந்த நிறுவனம், 2011ஆம் ஆண்டு இ-கேடிபி (e-KTP) திட்டத்துக்கான ஒப்பந்தத்தை வென்ற கூட்டமைப்பில் ஒரு நிறுவனம்.
தொடர்புடைய செய்திகள்
இ-கேடிபி திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் இந்தோனீசியாவின் உள்துறை அமைச்சு அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு கையூட்டு வழங்கியதாக வழக்கறிஞர் கூறினார்.
அந்தக் கையூட்டு மொத்த திட்டத்தின் மதிப்பில் 10 விழுக்காடு என்று நம்பப்படுகிறது.
வழக்கு விசாரணை இம்மாதம் 25ஆம் தேதி வரை தொடரும்.

