தமிழ்மொழி விழா 2026ன் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் தனது வருடாந்தர கருத்தரங்கு மாநாட்டை வரும் சனிக்கிழமை (மார்ச் 28) நடத்தவுள்ளது.
1965க்கும் 2025க்கும் இடையே சிங்கப்பூரில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள்மீது இந்த மாநாடு கவனம் செலுத்தும். செழுமைமிக்க உள்ளூர்த் தமிழ் இலக்கிய வளத்தைப் பற்றிச் சமூகத்தினர், குறிப்பாக இளையர்கள், மீண்டும் தெரிந்துகொண்டு வாசிக்க ஊக்குவிப்பதே மாநாட்டின் நோக்கம்.
சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்ப் படைப்புகளின் கருப்பொருள்கள், சிந்தனைகள் ஆகியவற்றை மாநாடு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாநாட்டில் பங்குபெறும் இளையர்களும் பொதுமக்களும் சிங்கப்பூரில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் புத்தகம் ஒன்றை நுணுகி ஆராய்ந்து தங்களது சிந்தனைகளைக் கட்டுரையாகவும் சிற்றுரையாகவும் படைக்க வேண்டும்.
தமிழ் வாசிப்பு குறைந்து வருவதாகத் தெரிவித்த மாநாட்டுத் தலைவர் பிரணவன் சிவலிங்கம், இது குறித்து ஏற்பாட்டாளர்கள் அக்கறை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “வாசிப்பு வட்டத்தை விரிவுபடுத்தும் முக்கிய இலக்கை இந்தத் திட்டம் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழர்கள் பலர், பள்ளிப் பருவத்தை முடித்த பின்னர் தமிழில் எழுதுவதையும் படிப்பதையும் நிறுத்துகின்றனர். எனவே, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
பங்கேற்பாளர்கள் சமர்ப்பிக்கும் சிறந்த 40 கட்டுரைகளுக்குப் பரிசுகள் அளிக்கப்படும். சிங்கப்பூரில் தமிழில் துடிப்புடன் எழுதப்படுவதாகக் குறிப்பிட்ட திரு பிரணவன், இங்குள்ள எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாகச் சராசரியாக வாரத்திற்கு ஒரு புத்தகம் வெளியிடுவதாகக் குறிப்பிட்டார்.

