இளையர் வாழ்வை வளமாக்கும் தமிழ்

இளையர் வாழ்வை வளமாக்கும் தமிழ்

4 mins read
மேல்நிலை வகுப்பில் பயின்று மாணவர்கள் ‘ஏ’ நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்ற நிலையில், தமிழ் மொழி விருப்பப் பாடமெடுத்துப் படித்த மாணவர்கள் சிலர் தங்கள் வாழ்வில் மொழியின் தாக்கம் குறித்துப் பகிர்ந்தனர்.
6834d599-bafc-48d0-8888-97325b4a2a68
தேர்வு முடிவுகளைப் பெற ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் (இடமிருந்து) அப்துல் ரஹீம் ஜெயுலாபுதீன் ஜஸீர், ஜோஸ்னா செந்தில் குமார், ஸ்வேதா நாடி பிரபாகரன், மணிகண்டன் ஆர்த்தி. - படம்: லாவண்யா வீரராகவன்

ஆளுமையை வளர்த்த தமிழ் மொழி

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவி ஜோஸ்னா செந்தில் குமார்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவி ஜோஸ்னா செந்தில் குமார். - படம்: லாவண்யா வீரராகவன்

தமிழ் மொழி, பாடம் என்பதற்கு அப்பால், தமது ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கும் உதவியதாக நம்புகிறார் மாணவி ஜோஸ்னா செந்தில் குமார்.

தமிழ் மொழி விருப்பப் பாடத் திட்டத்தில் பயின்ற ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவி ஜோஸ்னா, ‘ஏ’ நிலைத் தேர்வில் உன்னதத் தேர்ச்சி பெற்ற தலைசிறந்த மாணவர்களில் ஒருவர்.

உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தொடக்கக்கல்லூரித் தமிழாசிரியர் அளித்த ஊக்கத்தினால் தமிழ்ப் பாடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

உயர்நிலைப் பள்ளிவரை பலர் தமிழ் படித்தாலும், தொடக்கக்கல்லூரியில் தமிழ் விருப்பப் பாடம் எடுப்போர் குறைவு என்ற அவர், தம் வகுப்பில் தமிழ் பயின்ற 12 பேரில் தாமும் ஒருவர் என்பதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறினார்.

“தமிழ் வகுப்பு, தமிழ் மொழி படிப்பு என்பதற்கு அப்பால், இலக்கியம், கவிதை தொடங்கி சமூக நடப்புகள்வரை அலசும் தளம்போல அமைந்தது,” என்றார் ஜோஸ்னா.

மொழிப் பாடம் படித்ததால் சமூகம் குறித்த பார்வை, தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை என அனைத்தும் மேம்பட்டதைச் சுட்டினார்.

பல்வேறு எழுத்து, விவாதப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ள ஜோஸ்னா, தற்போது பயிற்சி ஆசிரியராக உள்ளார்.

இந்தப் பயிற்சி வாய்ப்பு, மொழியை முன்னிறுத்திய தொழில் வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்கான பாதையைக் காட்டியதாகச் சொன்ன ஜோஸ்னாவின் குறிக்கோள், எதிர்காலத்தில் சிறந்த தமிழாசிரியராக வேண்டும் என்பதே.

அழகியல்மிக்க மொழி

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் ஜெயுலாபுதீன் ஜஸீர்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் ஜெயுலாபுதீன் ஜஸீர். - படம்: லாவண்யா வீரராகவன்

தமிழ் மொழியின் ஆழத்தினால் ஈர்க்கப்பட்டவர் ஜோஸ்னா என்றால், அதன் இலகுவான தன்மையால் ஈர்க்கப்பட்டவர் அப்துல் ரஹீம் ஜெயுலாபுதீன் ஜஸீர்.

“பள்ளிக்காலத்திலேயே தமிழ் வகுப்பு சுவையான அனுபவமாக இருந்தது. எனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், தமிழை எங்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் விருப்பம் காரணமாகப் பல புதிய வழிகளைப் பயன்படுத்துவர். அது என்னை ஈர்த்தது,” என்றார் ஜஸீர்.

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியில், தமிழ் மொழி விருப்பப் பாடத் திட்டத்தில் பயின்ற இவருக்கு இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு. மொழியைத் தொடர்புக் கருவி, அடையாளம் என்பதாக மட்டுமன்றி, அதனைச் சுற்றியுள்ள அம்சங்களையும் கவனிக்கிறார் ஜஸீர்.

“மொழியின் வரலாறு, அதன் சிறப்பை வெளிப்படுத்தும் இலக்கியங்கள், மொழியினால் வளம் பெற்ற கலைகள் என அனைத்தையும் அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது,” என்றார் அவர்.

ஒரு சொல்லின் வேர், அச்சொல்லின் பல பொருள்கள், அதனைப் பிரிப்பது, அதனால் மாறுபடும் பொருள் எனப் பலவற்றையும் கற்றதாகச் சொன்னார் ஜஸீர்.

மொழிப்பாடத்தின் அழகியலை ரசித்துப் பேசிய ஜஸீருக்குக் கவிதை எழுதுவதும் விருப்பமான பொழுதுபோக்கு.

காத்தீப்புக்கும் இயோ சூ காங்கிற்கும் இடையிலான நீண்ட பயணத்தின்போது தாம் கவனிக்கும் காட்சிகள், மாலை நேரச் சூரியன் உள்ளிட்ட அன்றாடம் பலர் கடந்துபோகும் சிறு சிறு நுணுக்கங்களைக் கவனித்துக் கவிதை வடிக்கிறார் ஜஸீர்.

தேசியக் கல்விக் கழகத்தில் பயின்று தமிழாசிரியராக வேண்டும் என்பதே ஜஸீரின் குறிக்கோள். “தமிழாசிரியர் ஆக இயலாவிட்டால் வேறு பாட ஆசிரியர் ஆவேன். ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரை வாழ்நாள் முழுக்க மதிப்பர். ஒரு பிரதமரைக்கூட ஆசிரியர்தான் உருவாக்குகிறார். எனவே ஆசிரியராக விரும்புகிறேன்,” என்றார் ஜஸீர்.

தன்னம்பிக்கை வளர்த்த தமிழ்

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரிக்கு வந்த மாணவர் ஸ்வேதா நாடி பிரபாகரன்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரிக்கு வந்த மாணவர் ஸ்வேதா நாடி பிரபாகரன். - படம்: லாவண்யா வீரராகவன்

விருப்பப் பாடமாகத் தமிழ் மொழியைப் படித்ததால் சொற்சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் தொடங்கி, கல்வி உபகாரச் சம்பளம் வரையில் பல வகையிலும் முன்னுரிமை கிடைத்தது பெருமையளிப்பதாகச் சொன்னார் மாணவி ஸ்வேதா நாடி பிரபாகரன்.

மொழி தரும் அங்கீகாரம் இவருக்குத் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. தமிழ்க் கதைகளில் வாழ்க்கைக்குத் தேவையான பலவும் அடங்கியுள்ளதால் கதை வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாக ஸ்வேதா குறிப்பிட்டார்.

தற்போது சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பயிலும் பள்ளியில் பயிற்சி பெறும் இவர், தம்மை ஈர்த்த ஆசிரியர்களைப் போலவே தாமும் மாணவர் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ விரும்புகிறார்.

தமிழுடன் பயணம் செய்ய விருப்பம்

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவி மணிகண்டன் ஆர்த்தி.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவி மணிகண்டன் ஆர்த்தி. - படம்: லாவண்யா வீரராகவன்

சமூகம் குறித்த பார்வையைத் தமக்கு ஏற்படுத்தியது தமிழ் மொழிதான் என்ற மாணவி மணிகண்டன் ஆர்த்தி, தமிழ்மொழி வாழ்க்கையை அணுகும் முறையை மாற்றும் கருவி என்றார்.

ஆசிரியரின் ஊக்கத்தால் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட இவர், சிறுகதைகள் எழுதுவது, விவாதங்களில் பங்கேற்பது ஆகிய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

‘ஏ’ நிலைத் தேர்வில் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ள இவர், “நிதித்துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்பினாலும், தமிழ்மொழியைத் தொடர்ந்து பயில்வேன்,” என்றார்.

இளைய மாணவர்களுக்கு உதவுவது உட்பட பல்வேறு வழிகளில் தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் உறுதியாக இருக்கிறார் இவர்.

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி ஆசிரியர் கலைவாணி இளங்கோ, தமது மாணவர்கள் 12 பேரையும் தமது பிள்ளைகளாகக் கருதி வழிகாட்டியதாகக் குறிப்பிட்டார்.

“மாணவர்கள் பாடத்தைத் தாண்டி மொழியோடு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஓர் ஆசிரியராக அடுத்த தலைமுறைக்கு மொழியையும் பண்பாட்டையும் கொண்டுசெல்லும் பாலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என் மாணவர்கள் ஆசிரியர்களாக விரும்புவதாகக் குறிப்பிடுவது எனக்குப் பெருமையாக உள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்