முன்மாதிரித் தமிழாசிரியர்கள் பயன்படுத்தும் உத்திகளை வகுப்பறையிலிருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல வழி வகுத்தது மே 31ஆம் தேதி தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஏற்பாடுசெய்த ‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!’ நிகழ்ச்சி.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி, அன்றாட உரையாடல்களில் தமிழ்மொழியைப் பயன்படுத்த பெற்றோரையும் பிள்ளைகளையும் ஊக்குவித்தது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இம்முறை நல்லாசிரியர் விருது வென்ற தமிழாசிரியர்கள் முதன்முறையாகப் பங்கெடுத்தனர்.
சென்ற ஆண்டு தொடக்கப் பள்ளிப் பிரிவில் நல்லாசிரியர் விருது வென்ற ஆசிரியர்களான செங்காங் தொடக்கப்பள்ளி தமிழ்/மலாய் பாடத்துறைத் தலைவர் ஜெயசுதா விஜேய், சி.எச்.ஐ.ஜே தோ பாயோ தொடக்கப்பள்ளி வழிகாட்டி ஆசிரியர் வீரராஜு தேவிகா, ஊட்குரோவ் தொடக்கப் பள்ளித் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளர் சாரதா ராமன் ஆகியோர் வெவ்வேறு அறைகளில் பயிலரங்குகளை நடத்தினர்.
மாணவர்கள் அனைத்துப் பயிலரங்குகளுக்கும் சென்றனர்.
தொடக்கநிலை மூன்றாம், நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த மொத்தம் 21 மாணவர்கள் தம் தாய் அல்லது தந்தையுடன் பயிலரங்குகளில் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்பம், புத்தாக்க விளையாட்டுகள், தோட்ட உலா எனப் பல அங்கங்கள் பயிலரங்குகளுக்கு மெருகேற்றின.
‘திரும்பச் சொல்லுதல்’ உத்திமுறை
ஆசிரியர் சாரதா ‘கிளாஸ்பாய்ண்ட்’ எனும் செயலி வழி தன் பாடத்தைச் சுவாரசியமாக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
பட வில்லைகளிலிருந்த புகைப்படங்களைப் பார்த்து, ஒலிகளைக் கேட்டு, என்ன சத்தம்?, இது எந்த இடம்?, என்ன நடக்கிறது? போன்ற கேள்விகளுக்கு மாணவர்கள் பதில்களைச் செயலியில் ஒலிப்பதிவேற்றினர். அவர்களுக்குப் பெற்றோர் உதவி செய்தனர்.
“நான் கற்பித்த உத்திமுறை திரும்பச் சொல்லுதல் (Model-Repeat). பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு முன்மாதிரி. அவர்கள் பிள்ளைக்கு ஓர் இடத்தைப் பற்றித் தமிழில் கூறி, அதைப் பற்றியே பிள்ளையிடம் கேள்வி கேட்கலாம். அப்போது பிள்ளைகள் பெற்றோர் சொன்னதைத் திரும்பச் சொல்வார்கள்.
“இதை நடைமுறையில் எங்கு வேண்டுமானாலும் - வீட்டிலோ, பேருந்திலோ பூங்காவிலோ பயன்படுத்தலாம்,” என்றார் ஆசிரியர் சாரதா.
இந்த உத்திமுறையில் பயிற்சி பெற, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள தாவரங்கள் பற்றிப் பெற்றோர் பிள்ளைகளிடம் விவரித்தனர்.
பின்பு, அதைப் பற்றிக் கேள்விகள் கேட்டு, பிள்ளைகள் கூறியதைக் காணொளிகளாகச் செயலியில் பதிவேற்றினர்.
காணொளிகளின் ஒலியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் ஆசிரியர் சாரதா மாணவர்களை நேரில் பேசச் செய்து சீராகக் கையாண்டார். செயலியைப் பதிவிறக்க இயலாதோருக்குக் கூடுதல் கருவிகளும் வழங்கப்பட்டன.
பட அட்டைகள் வழி உரையாடல்
தன் பள்ளியின் நிதியாதரவோடு தொடக்கநிலை மாணவர்களுக்காகத் தான் உருவாக்கிய ‘அடி அடி’ அட்டை விளையாட்டு மூலம் (ஆங்கிலத்தில் SNAP போல்) மாணவர்களைக் கவர்ந்தார் ஆசிரியர் ஜெயசுதா விஜேய்.
இவ்விளையாட்டில், சொல்லுக்குரிய பொருளைக் காட்டும் பட அட்டைக்கு இணையான மற்றொரு படத்தைக் காட்டும் பட அட்டையை யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ அவர் அட்டைகளைக் கையால் அடித்தபின் அந்த சொல்லைக்கொண்டு ஒரு வாக்கியத்தை அமைக்க வேண்டும்.
கதைகளை ஓவியங்களாக வரைந்து பொம்மைகளுடன் கதைசொல்லும் அங்கத்தையும் அவர் நடத்தினார்.
“மாணவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை சொல் வளம். ஒரு தமிழ்ச் சொல்லுக்கான பொருள் சில சமயம் புரியாது. ஆங்கிலச் சொற்களின் தாக்கத்தினால் அவற்றைத் தமிழாக்கம் செய்து கட்டுரைகளில் பயன்படுத்தவும் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவதில்லை,” என்றார் ஆசிரியர் ஜெயசுதா.
பேசத் தெரிந்தால் வாசிக்கத் தொடங்குவர்
தானே எழுதிய ‘நான் படித்த புத்தகம்’ எனும் கதைப் புத்தகம் உட்பட, அச்சு, மின்னிலக்கக் கதை நூல்கள் மூலம் பயிலரங்கை நடத்தினார் ஆசிரியர் வீரராஜு தேவிகா.
பிள்ளைகளுடன் இணைந்து கதைகளைப் படிக்கும்போது இடையிடையே கேள்விகளையும் கேட்கப் பெற்றோரை அவர் ஊக்குவித்தார்.
பெற்றோரையும் பிள்ளைகளையும் பட வில்லைகளில் காட்டப்பட்ட சூழல்களுக்கேற்ப உரையாடல் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுத்தினார்.
“மாணவர்கள் பேச்சுத் தமிழில் பேசினாலே வெற்றிகரமானது. புத்தகத்தில் முக்கியமாக, முன்னட்டையில் இருப்பனவற்றைப் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.
“பிள்ளைகள் பேசத் தொடங்கினாலே, படிக்கத் தொடங்கி விடுவார்கள். அதனால் பெற்றோரே, பிள்ளைகளை நூலகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்து படியுங்கள்,” என்றார் ஆசிரியர் வீரராஜு தேவிகா.