தமிழாசிரியராக அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பணியாற்றிய திரு சி. சாமிக்கண்ணுவின் மாணவப் பருவத்தில் முக்கிய இடம்பிடித்திருந்தது தமிழ் முரசு.
தொடக்கநிலை இரண்டு மாணவராக பள்ளியில் தமிழ் முரசு செய்தித்தாளை வாசிக்கத் தொடங்கிய அவர், பின்னாளில் தமிழ்மொழியை வாழ்க்கைத்தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகோலாக அமைந்த காரணங்களில் தமிழ் முரசும் ஒன்று. திரு சாமிக்கண்ணுவின் பள்ளிக்காலத்தில் நூலகங்கள் பரவலாக இல்லை. தொலைக்காட்சியும் கிடையாது. ஸ்டாம்ஃபர்ட் சாலையில் முன்னர் அமைந்திருந்த ராஃபிள்ஸ் நூலகத்துக்கே செல்லவேண்டி இருந்தது.
அத்தகைய சூழலில் கதை புத்தகங்களைவிட அன்றாடம் வந்த தமிழ் முரசு போன்ற செய்தித்தாள்களே தமிழ்மொழி வாசித்தலுக்குத் துணை நின்றன.
மாணவ மணி மன்ற மலருக்கு சிறுகதை, கவிதை எழுதுவதையும் சிறுவயதில் அவர் ஒரு கை பார்த்திருந்தார்.
“ஆர்வத்தைத் தாண்டி, தமிழ்மீது பற்று ஏற்பட தமிழ் முரசு வாசிப்பதும் அதற்காக எழுதுவதும் வகைசெய்தன. சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தோடு ஒன்றுபடுவதற்கும் அது முக்கிய கருவியாய் பயன்பட்டது,” என்றார் திரு சாமிக்கண்ணு, 77.
வீட்டிலும் வட்டாரத்திலும் எப்போதுமே தமிழ்மொழியால் சூழப்பட்டிருந்த திரு சாமிக்கண்ணுவின் பள்ளிக்கல்வியும் தமிழ்மொழியியே இருந்தது. தற்போதைய தமிழாசிரியர்கள் பலருக்கோ வளரும் காலத்தில் ஆங்கிலவழி கல்வித்திட்டமே பரிச்சயம்.
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்த சமயத்தில் தமிழ் முரசு வாசித்தலை சக ஆசிரியர்களிடத்தில் ஊக்குவித்த திரு சாமிக்கண்ணு, குறிப்பாக அத்தகைய ஆசிரியர்களுக்கு இப்பழக்கம் பலனளிக்கும் என்றார்.
“எனது வயதொத்தோர் பெரும்பாலும் தமிழோடு வளர்ந்தனர். நவீனகாலத்திலோ சமூகத்தையும் உலகத்தையும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே மாணவர்கள் புரிந்துகொள்கின்றனர். எனவே, ஆசிரியப்பணியிலுள்ளோர் தமிழில் செய்திகளை வாசிப்பதும் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்வதும் ஒருவகை தமிழ்வழி கண்ணாடியின் வாயிலாக உலகைக் காண வழிகாட்டும். அந்த அனுபவத்தை மாணவர்களுக்குப் புகட்டவும் அவர்களுக்கு உதவும்,” எனத் தெரிவித்தார் திரு சாமிக்கண்ணு.
தொடர்புடைய செய்திகள்
திறன் வளர்க்க துணை புரிந்த தமிழ் முரசு
தமிழாசிரியர் பயிற்சித் திட்டங்களில் தமிழ் முரசு பயன்படுத்தப்படுவது 1960களில் வழக்கமாக இருந்தது. அதோடு, செய்திகளை வாசித்து கருத்து தெரிவிக்கும் திறன், இலக்கியங்களைச் செரிவாக ஆராயும் திறன் ஆகியவை சோதிக்கப்பட்டன. இவற்றுக்கு தமிழ் முரசு வாசித்தல் துணை புரிந்ததை நினைவுகூர்ந்தார் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் 79 வயது திரு ரா. துரைமாணிக்கம்.
“தலையங்கங்கள், கட்டுரைகள் படித்தது அத்தகைய எழுத்து நடையைப் பேச்சிலும் சிந்தனையிலும் கொண்டுவர உதவியது,” என்றார், 58 ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ள திரு துரைமாணிக்கம்.
மொழி மாற்றத்தை அறிய உதவிய வேலை இணைப்புத் திட்டம்
தேசிய கல்விக்கழகத்தில் கற்பித்தல் புலமையாளராகப் பணியாற்றி வரும் திருமதி பா. கங்காவுக்கு செய்தித்துறையை அறிமுகப்படுத்தியது தமிழ் முரசுடனான வேலை இணைப்புத் திட்டம்.
கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தமிழ் முரசில் அவர் செலவிட்ட இரண்டு வாரங்கள் அவருக்குச் செய்தித்துறையின் நுணுக்கங்களைப் புலப்படுத்தின.
“ஆசிரியப்பணியில் செய்திகளை மொழிபெயர்ப்பதற்கும், செய்திக்காக மொழிபெயர்ப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. முக்கிய அம்சங்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பது செய்திக்கான பாணி.
“உள்ளூர் சொற்களுக்கான மொழிமாற்றங்கள் கல்வி அமைச்சில் சற்று வேறுபட்டுள்ளன. இவற்றைப் புரிந்துகொண்டது மொழிமாற்றத்தின் முழுமையைப் பாராட்ட உதவியது,” என்றார் திருமதி பா. கங்கா.
சிங்கப்பூரின் கல்வித்திட்டப் பார்வை 1960களில் பிழைப்புத்திறனை நோக்கி இருந்தது. பின்னர் செயல்திறன், இலட்சிய நோக்கு, பண்புநலன் என காலகட்டத்துக்கு ஏற்ப மாறி, 2020ஆம் ஆண்டு முதல் வாழ்நாள் கற்றலை மையப்படுத்தியுள்ளது.
தேர்வுக்குத் தயார் செய்வதைவிட, ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்க்கை சவால்களுக்குத் தயார் செய்வதே முன்னுரிமை பெறுகிறது.
“காலகட்டத்துக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டுமெனில் ஆசிரியர்கள் செய்தியோடு நெருக்கமான தொடர்பில் இருப்பது அவசியம். அவர்களுக்குப் புகட்டக்கூடிய 21ஆம் நூற்றாண்டு திறன்களை நாமும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அவற்றைக் குறிப்பாக தமிழ்மொழியில் புரிந்துகொள்வது தமிழாசிரியர்களுக்குக் கைகொடுக்கும்,” என்று கூறினார் பா. கங்கா.
சிங்கப்பூர் வரலாற்றுடன் ஒன்றிணைந்த நாளிதழ்
கல்வியாளர்களால் கலாசார மணியாகக் கருதப்படும் தமிழ் முரசு, சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தேசியப் பல்கலைக்கழகத்தின் சார்பு நிலைப் பேராசிரியர் முஸ்தஃபா இசுடின் பாாராட்டினார்.
சிங்கப்பூர் எனும் பல கலாசார ஓவியத்திற்குள் தமிழ் பேசும் சமூகத்தினரை இணைத்து இந்நாட்டின் நல்ல ஒருங்கிணைப்பை வளர்ப்பதில் தமிழ் முரசுக்கு நல்ல பங்களிப்பு உள்ளது.
“மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தமிழ் முரசு, 21ஆம் நூற்றாண்டிலும் பயனுள்ளதாகவும் நீடித்த நிலைத்தன்மையுடனும் திகழ்கிறது. சிக்கல்மிக்க உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை எளிமைப்படுத்தி, எல்லா நிலைகளைச் சேர்ந்த மக்கள் கிரகிக்கக்கூடிய அளவுக்குத் தகவல்களைச் சேர்க்க இயன்ற தமிழ் முரசு, மகத்தான பொதுச்சேவையை ஆற்றுகிறது.” என்றார் டாக்டர் முஸ்தஃபா.