செய்தித்தாள் என்பதற்கும் அப்பால் தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர்த் தமிழர்களின் அடையாளமாக விளங்குவதாக அதன் ஆசிரியர் த. ராஜசேகர் கூறியுள்ளார்.
வாசகர் வேண்டுவதைத் தருவதுடன் அவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய தகவல்கள், வாழ்க்கையை மேம்படுத்தும் முறைகள், எதிர்காலச் சிந்தனைகளை வழங்குவதைத் தமிழ் முரசு நாளிதழ் இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் வரவேற்புரை ஆற்றியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
இன்னும் பத்தாண்டுகளில் சிங்கப்பூரை இல்லமாய்க் கொண்டு, ஓர் உலகத் தமிழ்ச் செய்தி ஊடகத்தை உருவாக்கத் தமிழ் முரசு முயலும் என்று அவர் உறுதியளித்தார்.
இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப, தரம் குறையாமல் தமிழும் தகவல்களும் தருவது தமிழ் முரசின் அடுத்தகட்டப் பயணம் என்று செய்தியறைக்கான இலக்கைத் திரு ராஜசேகர் முன்வைத்தார்.
“வேறு உத்தி, வேறு கோணம், அதிவேக வாழ்க்கைக்கு ஈடுகொடுத்துக் குறுகத் தரித்துக் கூறும் முறைகளை நாங்கள் கற்றுவருகிறோம். இருந்தபோதும் நாங்கள் மட்டும் தேர் இழுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.