தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகத் தமிழர்களின் தொடர்புப் பாலம் தமிழ் முரசு: தினேஷ் வாசு தாஸ்

2 mins read
தமிழை எளிதில் படிக்க முடியாதோரையும் சென்றடைவது முக்கியம் என்கிறார்
ac2d2e2c-3af8-4353-9f33-cf79cc03dd77
தமிழறிஞர் சுப. திண்ணப்பனுடன் உரையாடும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். உடன் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் மு.அ.மசூது. - படம்: ஃபேஸ்புக் / தினேஷ் வாசு தாஸ் 

தேசியச் செய்திகள், சிங்கப்பூரின் வளர்ச்சி தொடர்பான செய்திகளை வெளியிட்டுவரும் தமிழ் முரசு, மொழிநுட்பங்களைச் சரியாகப் புரிந்துகொண்டும் வாசகர்களின் பண்பாட்டை அறிந்து அப்பணியைச் செய்து வருவதாக கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தினர்க்கும் இடையே பாலம் அமைப்பதில் தமிழ் முரசு முனைப்போடு செயல்பட்டு வருவதாக அமைச்சர் தினேஷ் குறிப்பிட்டார். 

“சிங்கப்பூரின் நடப்புகளைத் தமிழில் எழுதுவதன்வழி, அவை உலகெங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடைகின்றன. அது முக்கியமான தொடர்பாகும்,” என்றார் திரு தினேஷ்.

மாணவர் முரசு வழியாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் இளையர்களுடன் இணைவதில் தமிழ் முரசு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார். 

“இருப்பினும், இளையர்களை மேலும் சென்றடைய தமிழ் முரசு கூடுதல் முயற்சி எடுக்க வேண்டுமெனக் கருதுகிறேன். இளையர்களில் பலருக்குத் தமிழ் மிக எளிதாகப் படிக்க முடிவதில்லை என்பதால் சில பகுதிகளில் மொழிநடையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மாணவர்களுக்கும் தமிழைச் சரளமாகப் படிப்பவர்களுக்கும் இடைநிலையில் இருக்கும் பொதுவான வாசகர்களை எவ்வாறு சென்றடைவது என்பது குறித்தும் தமிழ் முரசு சிந்திக்கலாம் என்றும் அவர் கூறினார்.

“குறிப்பாக, சிங்கப்பூரர்களுடன் எப்படி மேலும் இணைவது என்பது பற்றி அது ஆராயலாம்,” என்றார் அமைச்சர்.

சிங்கப்பூரின் முக்கிய கொள்கைத் தூணாக விளங்கும் இருமொழிக் கொள்கை மாறப்போவதில்லை என்று திரு தினேஷ் உறுதியுடன் கூறினார். 

தமிழ் உள்ளிட்ட தாய்மொழிச் செய்தி ஊடகங்களும் இந்நாட்டின் ஊடகத்துறையில் தொடர்ந்து தூண்களாகத் திகழும் என்றும் அவர் சொன்னார்.

“நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதால் தமிழை மேலும் வலுப்படுத்த தமிழர்களாக நம்மால் ஆனதைச் செய்வது முக்கியம்,” என்றார் அமைச்சர் தினேஷ். 

“மொழி மட்டுமின்றி, பண்பாட்டையும் மரபையும் விளக்க, முக்கியமாக இளையர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பள்ளியில் தமிழ் பயில்வது சிலருக்குக் கடினமாக இருந்தாலும் அதுவே நம் அனைவரையும் இணைக்கிறது. நம் மரபுடனும் நம்மை இணைக்கும் தமிழை எக்காலத்திலும் நாம் மறக்கலாகாது,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்