தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நூற்றாண்டை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது தமிழ் முரசு

3 mins read
வேறுபல நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் எட்டும் ஆற்றல் தமிழ் முரசிற்கு உண்டு என்றார் இதழின் ஆசிரியர் ராஜசேகர்
57489d8c-dc83-4d5c-a3cb-60e234c82516
தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர் - படம்: சுந்தர நடராஜ்

தமிழ் முரசு ஒரு செய்தி நிறுவனமன்று, சிங்கப்பூர்த் தமிழர்களின் அடையாளம் என்று தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

மக்களின் மனங்களை மாற்றுவதற்காகத் தமிழ் முரசு தொடங்கப்பட்டது. அந்த நோக்கம் இன்றும் மாறவில்லை என்றார் அவர்.

வாசகர் விரும்புவதைத் தருவதுடன் அவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய தகவல்கள், வாழ்க்கையை மேம்படுத்தும் முறைகள், எதிர்காலச் சிந்தனைகளை வழங்குவதில் தமிழ் முரசு நாளிதழ் குறியாய் உள்ளதாக திரு ராஜசேகர் கூறினார்.

‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் தொடக்க உரை ஆற்றியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

“தொண்ணூறு ஆண்டுகள் கடந்தும் தமிழ் முரசிற்காக இங்கே பேரளவில் குழுமியிருக்கிறோம் என்றால், ஏதோ ஓர் ஆற்றல் தமிழ் முரசை வழிநடத்தி வந்திருக்கிறது. அந்த ஆற்றல் ரகசியமன்று. உங்களில் பலரின் உழைப்பும் ஊக்கமும் உந்து சக்தியாய் இருந்திருக்கிறது.

தமிழ் முரசை மக்கள் குழந்தையாய், சொத்தாய், பாரம்பரியமாய், அடையாளமாய் மனத்தில் கொண்டிருந்ததனால் அவையினர் முன் நின்று உரையாற்றிக் கொண்டிருப்பதாக உருக்கத்துடன் அவர் குறிப்பிட்டார்.

“பாராட்டுபவர்களுக்கும், ஒரு சில சமயங்களில் கடிந்து கொள்பவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். பெற்றோரின் பாசம்போன்ற அந்த உரிமையை எங்களால் உணர முடிகிறது,” என்று திரு ராஜசேகர் கூறினார்.

“அதற்கும் மேலாக, இணையம்வழி அண்டை நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து, வேறுபல நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் எட்டும் ஆற்றல் தமிழ் முரசிற்கு உண்டு,” என்று அவர் திண்ணமாகக் கூறினார்.

இன்னும் பத்தாண்டுகளில் சிங்கப்பூரை இல்லமாய்க் கொண்டு, ஓர் உலகத் தமிழ்ச் செய்தி ஊடகத்தை உருவாக்கத் தமிழ் முரசு முயலும் என்று அவர் உறுதியளித்தார். 

சமூகத்தோடு சேர்ந்து வளர, மேலும் பொருளுதவி தேவை எனக் குறிப்பிட்ட திரு ராஜசேகர், அனைவரின் சந்தாத் தொகையும் விளம்பர வருமானமும் நிச்சயமாக உதவும் என்றார்.

இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப, தரம் குறையாமல் தமிழையும் தகவல்களையும் தருவது தமிழ் முரசின் அடுத்தகட்டப் பயணம் என்று செய்தியறைக்கான இலக்கை அவர் முன்வைத்தார்.

“வேறு உத்தி, வேறு கோணம், அதிவேக வாழ்க்கைக்கு ஈடுகொடுத்துக் குறுகத் தரித்துக் கூறும் முறைகளை நாங்கள் கற்றுவருகிறோம். இருந்தபோதும் நாங்கள் மட்டும் தேர் இழுக்க முடியாது,” என்றார் அவர்.

சிண்டா, இந்து அறக்கட்டளை வாரியம் உள்ளிட்ட இந்தியச் சமூக அமைப்பை வழிநடத்திய அனுபவம் கொண்டுள்ள திரு ராஜசேகர்,  கடந்த ஆண்டு தமிழ் முரசில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசாங்கத் தலைவர்கள், சமூக அமைப்புத் தலைவர்கள், கல்விமான்கள், எழுத்துலக வல்லுநர்கள், ஆதரவு நிறுவனங்கள் என 1,000க்கும் அதிகமானோர் குழுமியிருந்தனர். 

அமைச்சர்கள் இந்திராணி ராஜா, எட்வின் டோங், தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம், மூத்த துணையமைச்சர்கள் ஜனில் புதுச்சேரி, முரளி பிள்ளை, தினேஷ் வாசு தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு விக்ரம் நாயர், டாக்டர் ஹமீது ரசாக் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே, துணைத்தூதர் பூஜா டில்லு, சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் சேனரத் திசாநாயகே முதலியோரும் பங்கேற்றனர்.

திரு ராஜசேகரின் உரையை அடுத்து தமிழ் முரசின் வரலாற்றுச் சாரத்தைக் காட்டும் காணொளி, மேடையில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ உரையாற்றினார். 

பின்னர், தமிழ் முரசின் 90ஆம் ஆண்டு நினைவு மலர் வெளியிடப்பட்டு முன்னாள் இதழ் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினரான அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கும் முக்கிய நன்கொடையாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, மூன்று புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்