காலந்தோறும் கலைஞர்களின் அரங்கம்

6 mins read
54d1ff89-a07d-4f8b-9e04-33d48edbeb72
மேடை நாடகங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதோடு கலைஞர்கள் வளர்வதற்கும் ஓர் அங்கீகாரம் கொடுக்கும் தளமாக தமிழ் முரசு கருதப்படுகிறது. - படம்: வடிவழகன்

சிங்கப்பூரில் தமிழர்கள் கல்வியுடன் இலக்கியம், கலைகள், விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் மேம்பாடு காண தொடக்ககாலம் முதல் தமிழ் முரசு உந்துசக்தியாக இருந்து வருகிறது.

தமிழ் முரசின் நிறுவனர் கோ.சாரங்கபாணி 1952ல் தொடங்கிய தமிழர் திருநாள் இந்நாட்டின் தமிழர்களின், குறிப்பாகப் பாட்டாளி வர்க்கத்தினரின் கலை ஆர்வத்துக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கியக் களமாகவும் வாய்ப்பாகவும் அமைந்தது.

கோ சாரங்கபாணி 1952 முதல் முன்னெடுத்த தமிழர் திருநாள் கொண்டாட்டம். இந்நாட்டில் தமிழ் மொழி, இலக்கியத்துடன் கலைகள்
கோ சாரங்கபாணி 1952 முதல் முன்னெடுத்த தமிழர் திருநாள் கொண்டாட்டம். இந்நாட்டில் தமிழ் மொழி, இலக்கியத்துடன் கலைகள் - படம்: சாரங்கபாணி குடும்பம்

மேடை நாடகங்களுக்கு ஆதரவு

“சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்கள் அரங்கேறத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அன்று தமிழ் முரசு தந்து ஆதரவளித்ததால்தான் அந்தக் கலை நிலைபெற்றது,” என்று குறிப்பிட்டார் இந்நாட்டின் முன்னோடி மேடை நாடகக் கலைஞர்களில் ஒருவரான 95 வயது திரு எஸ் சப்தகிரி சர்மா (எஸ்எஸ் சர்மா).

சிங்கப்பூரின் மூத்த நாடகக் கலைஞர் எஸ் எஸ் சர்மா தமிழ் முரசு கலை வளர்ச்சிக்குப் பெரும் உறுதுணையாக இருந்ததாகக் கூறினார்.
சிங்கப்பூரின் மூத்த நாடகக் கலைஞர் எஸ் எஸ் சர்மா தமிழ் முரசு கலை வளர்ச்சிக்குப் பெரும் உறுதுணையாக இருந்ததாகக் கூறினார். - படம்: எஸ் எஸ் சர்மா

தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் நாடகங்கள் அரங்கேறுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ் முரசு முன்னின்று அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் முரசு தந்த ஊக்குவிப்பால் பல நல்ல கலைஞர்கள் உருவானதோடு பின்னாள்களில் அவர்கள் வானொலி, தொலைக்காட்சியிலும் புகழ்பெற தமிழ் முரசின் ஊக்குவிப்பு பேருதவியாக இருந்ததாக நினைவுகூர்ந்தார் திரு சர்மா.

தமிழ் முரசில் பிழைத்திருத்தும் பணியில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பணியாற்றிய திரு சர்மா, தொலைக்காட்சி, காணொளி வருகைக்குப் பின் மேடை நாடகங்கள் அருகத் தொடங்கியதாகச் சொன்னார்.

அக்காலகட்டத்தில் கலைதுறை சார்ந்த செய்திகளைத் தமிழ் முரசு வெளியிட்டுப் பேராதரவு அளித்தது. பல கலை நிகழ்ச்சிகள்பற்றி தமிழ் முரசு நிறுவனரும் ஆசிரியருமான தமிழவேள் கோ சாரங்கபாணி தமிழ் முரசில் வெளியிட்டதுடன் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தும் முன்னின்று நடத்தியும் உதவினார்,” என்றார் திரு சர்மா.

2000ஆம் ஆண்டின் இறுதிவரையில் தமிழ் முரசில் கலைத்துறை தொடர்பான செய்திகளுக்காக வாரந்தோறும் கலை முரசு என்ற தனிப் பக்கம் இடம்பெற்றது.

தற்போது தனியாகப் பக்கம் இல்லையென்றாலும் தமிழர்கள் பங்கேற்கும், படைக்கும் கலைச் செய்திகள், கலைஞர்கள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

கலாசார பதக்கம் பெற்ற நாடகக் கலைஞர் ச.வரதன்.
கலாசார பதக்கம் பெற்ற நாடகக் கலைஞர் ச.வரதன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“என் முதல் நாடகம் மேடையேறியபோது தமிழ் முரசு கொடுத்த ஆதரவை மறக்க முடியாது,” என்றார் சிங்கப்பூரின் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான 91 வயது திரு ச.வரதன்.

1955ஆம் ஆண்டில் நியூ வேர்ல்ட் அரங்கில் பகுத்தறிவு நாடக மன்றம் மேடையேற்றிய ‘நச்சுக் கோப்பை’ நாடகம் தமிழ் முரசில் அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது. நாடகத்தைப் பார்க்க தமிழ் முரசு சார்பில் திரு வை திருநாவுக்கரசு வந்ததை திரு வரதன் பகிர்ந்துகொண்டார்.

அக்காலகட்டத்தில் மலாயா பல்கலைக்கழக தமிழ்த் துறையை நிலைநிறுத்துவதற்காக ‘தமிழ் எங்கள் உயிர் நிதி’ என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டது. அதற்கு பல தனிமனிதர்களும் அமைப்புகளும் நன்கொடை வழங்கின.

“நச்சுக் கோப்பை நாடகத்தின் மூலம் ஈட்டிய தொகையில் செலவு போக மீதமுள்ள $601.45 தொகையை தமிழ் முரசு அலுவலகத்துக்குச் சென்று கோ சாரங்கபாணியிடம் கொடுத்தேன்,” என்ற திரு வரதன், தமது செயலைக் கண்டு அவர் நெகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார்.

“அப்போது முதல் நான் மேடையேற்றிய நாடகங்களுக்குத் தமிழ் முரசில் இலவசமாக விளம்பரம் வெளியிடப்பட்டது,” என்ற திரு வரதன், இந்நாட்டில் நாடகத்துறையின் வளர்ச்சிக்கு முரசு கொடுத்த ஆதரவு அளப்பரியது என்றார்.

கலை முரசு பக்கம் பல கலைஞர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்ள துணைபுரிந்ததையும் திரு வரதன் பகிர்ந்துகொண்டார்.

தமிழ் மேடை நாடகங்களுக்கும் கலைஞர்களுக்கும் சிங்கப்பூரில் இன்றும் தனி மரியாதை இருப்பதற்கு நிச்சயம் தமிழ் முரசு ஒரு முக்கியக் காரணம் என்று இந்நாட்டின் முன்னோடி நாடகக் கலைஞர்களான திரு எஸ் எஸ் சர்மா, திரு வரதன் இருவரும் குறிப்பிட்டனர்.

இளம் கலைஞர்களுக்கு ஆதரவு

அவாண்ட் தியேட்டரின் திரு ஜி. செல்வா. 
அவாண்ட் தியேட்டரின் திரு ஜி. செல்வா.  - படம்: ஜி.செல்வா

“நாங்கள் போட்ட ‘அக்கா’, ‘ரிசர்விஸ்ட்’ போன்ற பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நாடகங்களை மேடையேற்ற தமிழ் முரசு துணைபுரிந்தது,” என்றார் அவாண்ட் தியேட்டரின் திரு செல்வா.

நாடகம் குறித்த தமிழ் முரசு செய்தி.
நாடகம் குறித்த தமிழ் முரசு செய்தி. - படம்: செல்வா
நாடகம் குறித்த தமிழ் முரசு செய்தி.
நாடகம் குறித்த தமிழ் முரசு செய்தி. - படம்: செல்வா

காலத்தைக் கடந்து பல மேடை நாடகங்களின் கதைகளையும் கலைஞர்களின் வாழ்க்கையையும் சொல்லும் தமிழ் முரசு சிறந்த ஆவணம் என்றார் உள்ளூரின் பிரபல நாடகக் கலைஞர் திரு வடிவழகன்.

புகழ்பெற்ற கலைஞர் வடிவழகன் பிவிஎஸ்எஸ்.
புகழ்பெற்ற கலைஞர் வடிவழகன் பிவிஎஸ்எஸ். - படம்: வடிவழகன்

“மேடை நாடகங்களின் நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகத் தமிழ் முரசில் வெளிவந்த செய்திகள் கைகொடுத்தன. கலையின், கலைஞர்களின் அயரா உழைப்புக்குத் தமிழ் முரசு கொடுத்த அங்கீகாரத்தை மறக்க முடியாது,” என்றார் திரு வடிவழகன்.

தமிழ் முரசில் வெளிவரும் கலைகள் குறித்த செய்திகளைப் பள்ளிகளில் பயன்படுத்துவதாகவும் இளையர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2004ல் திரு வடிவழகன் உள்ளிட்ட நாடகக் கலைஞர்கள் பற்றி வெளிவந்த செய்தி.
2004ல் திரு வடிவழகன் உள்ளிட்ட நாடகக் கலைஞர்கள் பற்றி வெளிவந்த செய்தி. - படம்: வடிவழகன்

இசையும் நடனமும் வளர உதவிய முரசு

பிளேக்ஸ்பைஸ் மீடியா ஊடகத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திரு சலீம் ஹாதி.
பிளேக்ஸ்பைஸ் மீடியா ஊடகத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திரு சலீம் ஹாதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் குரலாக இருக்கும் தமிழ் முரசு, மக்களிடம் உள்ளூர் கலைகளைக் கொண்டு சேர்க்கிறது என்றார் பிளேக்ஸ்பைஸ் மீடியா (Blacspice Media) ஊடக நிறுவனத்தின் நிறுவனர் திரு சலீம் ஹாதி.

“தமிழ் முரசில் எனது படைப்புக் குறித்து வரும் செய்திக்கு நல்ல மதிப்பு கிடைக்கிறது. தமிழ் முரசில் செய்திகள் வருவது ஓர் அங்கீகாரம்,” என்றார் திரு சலீம்.

தமிழ் முரசு, வாழ்க்கையில் மறக்க முடியாத பல தருணங்களை நினைவுபடுத்தும் பெட்டகமாகத் திகழ்கிறது என்பது கலைஞர்களின் ஒருமித்த கருத்து.

சிங்கப்பூரில் இசைக் கலையையும் கலைஞர்களையும் தமிழ் முரசு வளர உதவியது, இன்றும் உதவுகிறது.

காலத்தால் அழியாத பொக்கி‌‌‌‌ஷப் பெட்டகம்

தமிழ் முரசு கலைகளுக்குக் கொடுத்த ஆதரவு 1950கள் வரை பின்னோக்கிச் செல்கிறது. சிங்கப்பூரில் பிரபல நடனக் கலைக் குழுக்களில் ஒன்றான பாஸ்கர் கலைக் கழகம் (Bhaskar’s Arts Academy) அதற்கு ஒரு சிறந்த சான்று.

“எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளுக்குத் தமிழ் முரசு சிறப்பான ஆதரவு தந்துள்ளது. மேடை நிகழ்ச்சிகள் பற்றிய முரசின் செய்திகள் பலரிடம் அதைக் கொண்டு சேர்க்க உதவியது,” என்றார் பாஸ்கர் கலைக் கழகத்தின் நிறுவன நிர்வாகி திருவாட்டி தவ ராணி மோகன்.

1952ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த திரு கிரு‌ஷ்ண பிள்ளை பாஸ்கர் சிங்கப்பூரில் கால் வைத்தார். அதையடுத்து இங்கேயே இருந்துவிட்ட அவர், சிங்கப்பூரின் முதல் இந்திய நாட்டிய ஆசிரியரானார். அதிலிருந்து பாஸ்கர் கலைக் கழகமும் பிறந்தது.

திரு பாஸ்கர், திருமதி பாஸ்கர்.
திரு பாஸ்கர், திருமதி பாஸ்கர். - படம்: பாஸ்கர் கலைக் கழகம்
திரு பாஸ்கர், திருமதி பாஸ்கர்
திரு பாஸ்கர், திருமதி பாஸ்கர் - படம்: பாஸ்கர் கலைக் கழகம்
திரு பாஸ்கர், திருமதி பாஸ்கர்.
திரு பாஸ்கர், திருமதி பாஸ்கர். - படம்: பாஸ்கர் கலைக் கழகம்

“1958ஆம் ஆண்டு திரு பாஸ்கரின் மனைவி திருவாட்டி சாந்தா பாஸ்கர் நடனமைத்து மேடையேற்றிய முதல் படைப்புக்குத் தமிழ் முரசு கொடுத்த ஆதரவை மறக்க முடியாது. பல இன நடனக் கலைஞர்களுடன் மேடையேறியது ‘பட்டர்ஃபிளை லவர்ஸ்’ (Butterfly Lovers) என்ற நாட்டிய நாடகம்,” என்ற திருவாட்டி தவ ராணி, அச்சமயம் திருவாட்டி சாந்தா பாஸ்கர் தனது நடன அரங்கேற்றத்தையும் சிங்கப்பூரில் நடத்தியதைக் குறிப்பிட்டார்.

1958இல் திருவாட்டி சாந்தா பாஸ்கர்.
1958இல் திருவாட்டி சாந்தா பாஸ்கர். - படம்: பாஸ்கர் கலைக் கழகம்

இது போன்ற காலத்தால் அழியாத அரிய தகவல்களைத் தமிழ் முரசு கண் முன்நிறுத்துகிறது என்றார் திருவாட்டி தவ ராணி.

திரு பாஸ்கர் மாணவர்களுக்குப் பரதக் கலைகளைக் கற்பிக்கிறார்.
திரு பாஸ்கர் மாணவர்களுக்குப் பரதக் கலைகளைக் கற்பிக்கிறார். - படம்: பாஸ்கர் கலைக் கழகம்

தமிழ் முரசு மூலம் வெளிச்சத்துக்கு வந்த எத்தனையோ மறக்கப்பட்ட கலைகளில் தெருக்கூத்தும் ஒன்று என்றார் திருவாட்டி தவ ராணி. “2017ஆம் ஆண்டு நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற தெருக்கூத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது தமிழ் முரசு. விக்டோரியா மேடையில் அதற்கான தளத்தைத் தமிழ் முரசு அமைத்துக் கொடுத்தது சிறப்பு,” என்றார் அவர்.

தமிழ் முரசு தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து 2017ல் நடத்திய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பாஸ்கர்ஸ் கலைக் கழகம் படைத்த தெருக்கூத்து.
தமிழ் முரசு தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து 2017ல் நடத்திய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பாஸ்கர்ஸ் கலைக் கழகம் படைத்த தெருக்கூத்து. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2017ல் வில்லிசையாலும் கணீரென்ற கதைசொல்லும் முறையாலும் மேடையைக் கலக்கிய பாரதி திருமகன் குடும்பத்தினர் படைத்த சிங்கப்பூரின் ‘அதி நவீன குதிரை பந்தய லாவணி’ பற்றிய வில்லுப்பாட்டு இளையர்களையும் கவர்ந்தது. 
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2017ல் வில்லிசையாலும் கணீரென்ற கதைசொல்லும் முறையாலும் மேடையைக் கலக்கிய பாரதி திருமகன் குடும்பத்தினர் படைத்த சிங்கப்பூரின் ‘அதி நவீன குதிரை பந்தய லாவணி’ பற்றிய வில்லுப்பாட்டு இளையர்களையும் கவர்ந்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தமிழ் முரசு தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து 2017ல் நடத்திய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பாரம்பரிய முறையில் கதை சொன்ன கலைஞர்கள் பார்வையாளர்களை இறுதி வரை இருக்கைகளில் கட்டிப்போட்டனர்.
தமிழ் முரசு தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து 2017ல் நடத்திய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பாரம்பரிய முறையில் கதை சொன்ன கலைஞர்கள் பார்வையாளர்களை இறுதி வரை இருக்கைகளில் கட்டிப்போட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அந்த வாய்ப்புக்குப் பின் பல இடங்களில் மீண்டும் தெருக்கூத்து அரங்கேறியதையும் திருவாட்டி தவ ராணி குறிப்பிட்டார்.

முரசால் வளர்ந்த கலைத்துறை

அப்சராஸ் கலைப்பள்ளியின் நிறுவனரும் கலாசார பதக்கம் பெற்ற கலைருமான கலைஞர் நீலா சத்தியலிங்கம்.
அப்சராஸ் கலைப்பள்ளியின் நிறுவனரும் கலாசார பதக்கம் பெற்ற கலைருமான கலைஞர் நீலா சத்தியலிங்கம். - படம்: அப்ரசாஸ் ஆர்ட்ஸ்

1977ஆம் சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய கலை விழாவில் சிறந்த படைப்புக்கான விருதை வென்ற அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைப்பள்ளி அப்போது தொடங்கப்பட்டது. அத்தகைய பல மைல்கற்களை இன்றுவரை தமிழ் முரசில் காண முடிகிறது என்றார் அப்சராஸ் கலைப்பள்ளியின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடனக்குழுவினர்.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடனக்குழுவினர். - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்துக்கும் தமிழ் முரசு உறுதுணையாக இருந்ததைக் குறிப்பிட்டார், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கழகத்தின் முதல்வராகச் சேவையாற்றிய திரு சங்கர் ராஜன்.

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் முதல்வராகக் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் சேவையாற்றினார் கலைஞரும் கலை ஆர்வலருமான திரு சங்கர் ராஜன்.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் முதல்வராகக் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் சேவையாற்றினார் கலைஞரும் கலை ஆர்வலருமான திரு சங்கர் ராஜன். - படம்: திரு சங்கர் ராஜன்

“தனிப்பட்ட வகையிலும் என் கலை வளர்வதற்குத் தமிழ் முரசு ஒரு காரணம். 11 வயதிருக்கும்போது என் மிருதங்க அரங்கேற்றத்திற்கு கோ.சாரங்கபாணி நேரில் வந்து சிறப்பித்தார்,” என்று நினைவுகூர்ந்த திரு சங்கர், தமிழ் முரசில் வெளிவரும் செய்திகள் தம்மைப் போன்ற கலைஞர்களுக்குத் தொடர்ந்து அங்கீகாரம் கொடுத்து வருவதைக் குறிப்பிட்டார்.

1950களிலிருந்து 1970கள் வரை திரு சங்கரின் தாயார் திருவாட்டி சாரதா ராஜன் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளும் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளில் பாடுவது வழக்கம்.

“அவற்றைத் தமிழ் முரசு அப்போது செய்தியாக வெளியிட்டது நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது,” என்ற திரு சங்கர், தமிழ் முரசு காலத்தால் அழியாத பொக்கி‌‌ஷம் என்று வருணித்தார்.

எந்த ஒரு கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் மேடைப் படைப்பாக இருந்தாலும் தமிழ் முரசை அங்கு காண முடிந்தது என்ற திரு சங்கர், பல மாணவர்களின் அரங்கேற்றங்கள் பற்றிய செய்தியும் தமிழ் முரசில் இடம்பெற்றது அவர்களின் கலைப்பயணத்துக்குச் சிறந்த தூண்டுகோலாக இருந்தது என்றார்.

ஆறு வயதிலிருந்து புல்லாங்குழல் வாசித்துவரும் முனைவர் கானவினோதன் ரத்னம், “சிறிய நிகழ்ச்சியோ, பெரிய நிகழ்ச்சியோ தமிழ் முரசு அதற்கென ஓர் இடம் ஒதுக்காமல் இருந்ததில்லை,” என்றார்.

2024 நவம்பர் மாதம் சிங்கப்பூரின் உயரிய கலாசார பதக்கம் வென்றார் இசையமைப்பாளரும் புல்லாங்குழல் கலைஞருமான முனைவர் கானவினோதன் ரத்னம்.
2024 நவம்பர் மாதம் சிங்கப்பூரின் உயரிய கலாசார பதக்கம் வென்றார் இசையமைப்பாளரும் புல்லாங்குழல் கலைஞருமான முனைவர் கானவினோதன் ரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரங்கள், விமர்சனங்கள் போன்றவை தனிப்பட்ட கலைஞர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றார் அவர்.

“சிங்கப்பூரின் உயரிய கலாசாரப் பதக்கத்தைப் பெற்றபோது தமிழ் முரசு அதை முதல் பக்கத்தில் அச்சிட்டது. தமிழ் முரசு எந்த அளவுக்குக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது,” என்றார் முனைவர் கானவினோதன்.

குறிப்புச் சொற்கள்