சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் அடையாளமாகவும் தமிழ்ச் சமூகத்தின் குரலாகவும் விளங்கிவரும் தமிழ் முரசு, இன்று அதன் 90வது ஆண்டைப் பெருமையுடன் கொண்டாடுகிறது.
இத்தனை ஆண்டுகளாக ஏராளமான வாசகர்கள், விளம்பரதாரர்கள், படைப்பாளர்களின் ஆதரவு தமிழ் முரசின் தொடர் பயணத்திற்கு உந்துதலாக அமைந்துள்ளது.
தமிழ் முரசின் வரலாற்றில் முதல் முறையாக இன்று உங்கள் கைகளில் தவழும் இந்த 90 பக்க நாளிதழ் உங்களைப் பற்றியது.
சாமானியர்களின் குரலாகவும் சிறுதொழில் நிறுவியோர், புது முயற்சியை மேற்கொண்டவர்கள், சாதனைப் படைத்தவர்கள், சிறப்புத் தேவையுடையோர், வெளிநாட்டு ஊழியர்கள், புலம்பெயர்ந்த தமிழர் என வெவ்வேறு குழுவினரின் கதைகளை ஆண்டாண்டுகளாக இந்த ஊடகம் தாங்கிவந்துள்ளது.
அந்தப் பெருமையைத் தொகுத்து இந்த இதழ் செய்திகளைத் தாங்கி வந்துள்ளது.
பாலர்பருவ குழந்தைகளுக்குப் பாலர் முரசு, மாணவர்களுக்கு மாணவர் முரசு, இளையோருக்கு இளையர் முரசு எனச் சிறு பருவம் முதலே தமிழோடு வளரத் தமிழ் முரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் என்றும் தளம் தந்த தமிழ் முரசு இன்றைய பத்திரிகையில் ஏராளமான படைப்புகளைத் தந்து கொண்டாடுகிறது.
வரலாற்றில் சந்தித்த ஏற்றங்கள், சவால்கள், கொண்டாட்டங்களையும் தமிழ் முரசால் ஏற்பட்ட தாக்கங்களையும் இயன்றவரை தொகுத்து வழங்கிவந்துள்ளோம். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக அச்சுக்கோக்கும் பணி முதல் மெய்ப்புத் திருத்தும் பணிவரை பங்காற்றி வரும் தமிழ் முரசின் மூத்த ஊழியர் திரு எம். நடராசனின் எண்ணவோட்டங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியைத் தழுவிய கதை, வாழ்விணையர்கள் தமிழ் முரசு ஆசிரியர்களான வரலாறு என பல சுவாரசியமான கட்டுரைகளும் நேர்காணல்களும் இந்த இதழில் உண்டு.
செய்தியோடு தமிழ்மொழியையும் நேர்த்தியான முறையில் தலைமுறைகள் தாண்டியும் கடத்தும் பெரும் சமூகப் பொறுப்பையும் ஏற்றுள்ளது தமிழ் முரசு.
தமிழவேள் கோ சாரங்கபாணி நிறுவிய தமிழ் முரசு, 1974ஆம் ஆண்டு அவர் மறைவுக்குப் பின் சறுக்கலை எதிர்நோக்கியது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தடுமாறிய தமிழ் முரசை 1988ல் பொறுப்பேற்ற வை. திருநாவுக்கரசு தூக்கி நிறுத்தினார். தமிழ் முரசின் அடுத்த அத்தியாயம் தொடங்கியது. முரசு கணினிமயமானது.
அடுத்த தலைமுறையினருக்கு மொழியிலும் தமிழ்ச் செய்தியிலும் அக்கறையை ஏற்படுத்துவது இலக்கானது. குடும்பப் பத்திரிகையாக இருந்த தமிழ் முரசு சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத்தின் கீழ் செயல்படத் தொடங்கியது தமிழ் முரசு நீடித்திருப்பதை உறுதிசெய்தது.
தற்போது மின்னிலக்கமயமாதலை அரவணைத்து புதுத் தெம்புடன் தமிழ் முரசு வீரநடை போடுகிறது.
மூத்த செய்தியாளர்களின் பலத்தையும் புதிய தலைமுறையினரின் வேகத்தையும் இணைத்து உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது முரசு.
சுதந்திர சிங்கப்பூரின் 60 ஆண்டு வரலாற்றில் இந்நாட்டின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி வளரவும் தழைக்கவும் பங்காற்றி வருகிறது.
சிறிய சமூக அமைப்பின் கொள்கை ஏடாகத் தொடங்கி, நாளிதழாக உருவெடுத்து, உலகின் ஆகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றாக இன்று பெருமையுடன் தமிழ் பரப்பி வருகிறது.
நாளிதழுடன் இணையப் பக்கம், திறன்பேசிச் செயலி, சமூக ஊடகப் பக்கங்கள் என ஏராளமான தளங்களில் வாசகர்களுடன் இணைந்துள்ளது.
தொடக்கம் முதலே முரசறைந்து செய்தி பரப்புவதுடன் வாசிப்புப் பழக்கத்தையும் சிந்தனைத் திறனையும் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு வந்துள்ள தமிழ் முரசு அதன் நோக்கத்தில் சற்றும் வழுவாது செயல்பட்டு வருகிறது.
வாசகர்களின் ஆர்வத்துக்கேற்பவும் காலத்தின் தேவைக்கு ஏற்பவும் தன்னை உருமாற்றிக்கொண்டு படச்செய்தி, வலையொளி, காணொளி என பல வகையான முறைகளில் செய்தியையும் தகவல்களையும் மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் வாகனமாகத் தமிழ் முரசு விளங்கி வருகிறது.
தமிழ்ச் சமூகத்துடன் கைகோத்து நூற்றாண்டை நோக்கிய பயணத்தை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடர தமிழ் முரசு கடப்பாடு கொண்டுள்ளது.