தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களின் குரலாய் ஒலிக்கும் தமிழ் முரசு

4 mins read
d9fb5472-767a-4409-8304-7fd73e979122
கொவிட்-19 காலகட்டத்தில் தமிழ் முரசைப் படித்து வெளிநாட்டு ஊழியர்கள் முக்கிய விவரங்களைத் தெரிந்துகொண்டனர். - படம்: தமிழ் முரசு

சமூகத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் தமிழ் முரசு,தாயை, தாய்நாட்டை, குடும்பத்தை, உற்றார் உறவினரைப் பிரிந்து, வேலைக்காக சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்களையும் மறந்துவிடவில்லை.

வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வு கருதி, அவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் எடுத்துரைப்பதோடு, அவர்களின் சாதனைகளையும் சிங்கப்பூருக்கு ஆற்றும் சேவைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, வெளிநாட்டு ஊழியர்களின் நாடிதுடிப்பாகத் தமிழ் முரசு அயராமல் இயங்கி வருகிறது.

திறமைகளும் கொண்டாட்டங்களும்

வீட்டிலிருந்து வெகுதொலைவில் பல பண்டிகைகளைக் கொண்டாடும் வெளிநாட்டு ஊழியர்களின் மகிழ்ச்சியான தருணங்களைச் செய்தியாக வெளியிட்டு அக்கொண்டாட்டங்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது தமிழ் முரசு.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு ஊழியர்களின் திறமைகளும் தனித்துவமான கலைகளும் பதிவிடப்பட்டுள்ளன.

“வெளிநாட்டு ஊழியர்களை மதித்து, அரவணைத்து, அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டுள்ள தமிழ் முரசின் செய்தியைப் படித்து, பலர் அவர்கள் கௌரவிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள்,” என்று பகிர்ந்துகொண்டார் செங் சான் சமூக மன்ற இந்தியச் செயற்குழு தலைவர் நடனசிகாமணி செந்தில், 50.

1995ல் வெளிநாட்டு ஊழியராக சிங்கப்பூருக்கு வந்து, 2007ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்று இன்று தொடர்ந்து சமூக மன்றங்களிலும் வசிப்போர் குழுக்களிலும் தொண்டாற்றி வருகிறார்.

வெளிநாட்டு ஊழியர்களின் தனித்திறன் அறியும் சிங்கப்பூர்க் குடிமக்களுக்கும் அவர்கள்மீது கொண்டுள்ள மதிப்பு உயர இச்செய்தி வழிவகுக்கும் என்றும் திரு செந்தில் பகிர்ந்துகொண்டார்.

தங்கள் உடல்நலத்தைக் கவனிக்காமல் தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக உடல்நலம் பேணும் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் திரு எம். பாலமுரளி, 31.

தமது தங்குவிடுதியில் இருக்கும் ஏறத்தாழ 30 சக வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்ச்சியைப் பற்றித் தமிழ் முரசில் செய்தி வெளிவந்தது.

“செய்தியைப் பார்த்த பிறகுதான், மற்ற தங்குவிடுதிகளிலும் வெளிநாட்டு ஊழியர்களின் நலன் கருதி பல முயற்சிகள் எடுக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன,” என்றார் திரு பாலமுரளி.

செய்தி பரவிய பிறகு, அம்முயற்சிகளுக்கான நிதியுதவி வழங்கவும் ஆதரவாளர்கள் முன்வந்தனர் என்று அவர் பகிர்ந்துகொண்டார்.

நிச்சயமற்ற சூழலிலும் நலன் பேணிய தமிழ் முரசு

கொவிட்-19 காலகட்டத்தில், வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்த தமிழ் முரசு ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

அச்சமயத்தில், வாழ்வதற்காகக் கடல் கடந்து வந்து வேலை செய்பவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் சவால்களையும் தமிழ் முரசு பதிவிட்டது.

“அந்த நேரத்தில் வேலை இல்லை என்பதால், எங்களால் வேலைக்கும் போக முடியவில்லை, காய்கறிகள், உணவுப் பொருள்கள் என எதையும் வாங்கவும் முடியவில்லை. இச்சூழலை தமிழ் முரசு பதிவிட்டது.” என்றார் 14 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் திரு செல்வராஜ் கண்ணன், 48.

அப்பதிவுக்கு பிறகுதான், அவரது பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றும் விதமாகத் தங்க தனியிடம் ஒதுக்கப்பட்டது என்றும் தங்களுக்குத் தேவையான உணவு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகள் பூர்த்தியாக வழிவகுத்ததோடு, உற்றார் உறவினரைப் பிரிந்து வேலை செய்யும் இவர்களின் குடும்பங்களுக்கும் தமிழ் முரசு உறுதுணையாக இருந்தது என்றார் திரு கண்ணன்.

“சிங்கப்பூரில் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று வலியுறுத்தும் விதமாகவும் சிங்கப்பூர் மக்களின் நலன் கருதி எடுக்கப்படும் முயற்சிகளை எடுத்துரைக்கும் விதமாகவும் தமிழ் முரசு பல செய்திகளைப் பதிவிட்டது. இந்தியாவில் இருந்துகொண்டு, தமிழில் வெளியிடப்படும் தமிழ் முரசு செய்தியைப் படித்துத்தான் எங்கள் குடும்பத்தினர் பதற்றமின்றியும் பயமின்றியும் இருந்தனர்,” என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றுக் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டபோதும், அவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்கள், அவர்களுக்கான உதவிகள், அரசாங்கம் சார்ந்த திட்டங்கள் என எல்லாவற்றையும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்திற்கே கொண்டுசேர்த்தது தமிழ் முரசு.

தமிழ் முரசைப் படித்து நடப்பு விவகாரங்களை அறிந்துகொள்ளும் வெளிநாட்டு ஊழியர்.
தமிழ் முரசைப் படித்து நடப்பு விவகாரங்களை அறிந்துகொள்ளும் வெளிநாட்டு ஊழியர். - படம்: தமிழ் முரசு

கொரோனா காலகட்டத்தின்போது, வெளிநாட்டு ஊழியர்கள் பலர் சிங்கப்பூர் மக்களின் நலனை முன்னிறுத்தி சமூகத்திற்குச் சேவை செய்தனர்.

அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபட்டு, சமூகத்திற்குத் தொண்டாற்றிய திரு லெட்சுமணன் முரளிதரனின் சேவையைத் தமிழ் முரசு பதிவு செய்தது.

“அச்செய்தியை மற்ற வெளிநாட்டு ஊழியர்கள் படித்தபோது, இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும் அனைத்து மக்களுக்கும் நாம் உதவ வேண்டும் என்ற மனப்பான்மை அவர்களுள் உருவாகியது; சமூகத் தொண்டில் ஈடுபட மற்ற ஊழியர்களையும் தூண்டியது,” என்றார் திரு முரளிதரன்.

செய்தியைப் படித்த சக ஊழியர்கள், இந்தியாவிலிருந்த குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலர் அவரைப் பாராட்டியதாகவும் சமூகத்தின் நலன் கருதி மேலும் பல பணிகளில் ஈடுபட அவருக்கு மிகுந்த ஊக்கம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உரிமைக்குரலாய் ஒலிக்கும் முரசு 

பொருள் ஈட்ட அயல்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் சில நேரம் வேலையிட விபத்தில் சிக்கி காயமடைய நேரிடுகிறது. சில நேரங்களில் தங்கள் உயிரையும் இழக்க நேரிடுகிறது. அத்தருணத்தில் எல்லாம் அவர்களின் உரிமைக்குரலாய் தவறாமல் ஒலித்திருக்கிறது தமிழ் முரசு.

குறிப்பாக, தமிழ் ஊழியர்களின் அக்கறைகளை அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் தெளிவாகத் தெரியவைக்கவும் தமிழ் முரசு தவறியதில்லை.

நடப்பு விவகாரங்களை அறிந்துகொள்ள நாடும் தளம்

வெளிநாட்டு ஊழியர்களின் தொடர் பணிகளை எடுத்துக்காட்டும் வகையில், அவர்களின் தேவைகளையும் திறமைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தமிழ் முரசு, வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தேவையான செய்திகளையும் கொண்டுசேர்க்கிறது.

“என்னைப்போன்ற ஊழியர்களுக்கு ஆங்கிலத்தில் செய்தி படிப்பது சிறிது கடினம். சிங்கப்பூர் செய்திகளை விரிவாகத் தமிழில் பதிவிடும் ஒரே செய்தித்தாள் தமிழ் முரசு மட்டுமே என்பதால், உள்ளூர் நடப்பு விவகாரங்களை எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது” என்றார் 14 ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூருக்கு வந்த திரு சுப்பையன் பழனியப்பன்.

சிங்கப்பூரில் பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்து நாள்தோறும் தமிழ் முரசு செய்தித்தாளை வாங்கி அன்றைய முக்கிய செய்திகள், சிங்கப்பூர், மலேசிய, இந்தியச் செய்திகள் ஆகியவற்றை இவர் படித்து வருகிறார்.

கடந்த ஈராண்டுகளாகச் செய்தித்தாளுக்குப் பதிலாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் முரசு செயலியை இவர் பயன்படுத்தி வருகிறார்.

தினமும் காலையில் தமிழ் முரசு செய்தித்தாளைப் படித்துவிட்டு தங்கள் வேலையைத் தொடங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
தினமும் காலையில் தமிழ் முரசு செய்தித்தாளைப் படித்துவிட்டு தங்கள் வேலையைத் தொடங்கும் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: எம். பாலமுரளி

சந்தாதாரராகச் சேர்ந்து, தமது தங்குவிடுதியில் இருக்கும் சக ஊழியர்களோடு இணைந்து நாள்தோறும் காலையில் தமிழ் முரசு படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மற்றொரு வெளிநாட்டு ஊழியர் திரு எம். பாலமுரளி.

“தினமும் குறைந்தது தலைப்புச் செய்திகளையாவது படித்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்வேன். பெரும்பாலும் நான் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளும் தமிழ் முரசில் இடம்பெற்றிருக்கும்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்