சிங்கப்பூர் தமிழ் ஊடக வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக திகழும் தமிழ் முரசு நாளிதழ் தனது 90வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
இவ்விழாவின் சிறப்பாக தமிழ் முரசு நாளிதழ் மூலம் வலிமைபெற்று வளர்ச்சி கண்ட பல சிறந்த வணிகங்கள், நிறுவனங்கள், சாதனையாளர்களின் பயணத்தை இப்பதிவு காண்கிறது.
பூக்களை அலங்காரம் செய்யும் தொழில் நடத்திவரும் 33 வயது கௌசல்யா கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ்முரசு அவரின் கதையை செய்தியாக வெளியிட்ட பிறகு இன்ஸ்டகிராமில் விரைவில் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்து ரசிகர் கூட்டம் பெருகியது.
தமிழ்முரசில் கௌசல்யா இடம்பெற்ற செய்தியை பலரும் பகிர்ந்துகொள்ள தொடங்கியதால் அவரது தொழிலுக்கு ஏற்றம் கிடைத்ததாகவும் அவர் சொன்னார்.
கிரியேட் எஸ்ஜி சமூக நிறுவனத்தின் இணை நிறுவனர் குமரவேலு தமிழ்முரசு நிறுவனத்திற்கு பெரும் ஆதரவாக இருந்ததாக சொன்னார்.
சமூக ஊடகங்களைத் தவிர நிறுவனம் பொதுமக்களுடன் ஒரு நல்ல இணைப்பை வைத்திருக்க தமிழ்முரசு உதவியதாகவும் சொன்னார். தீபாவளி கண்காட்சிகளாக இருந்தாலும் புத்தக வெளியீட்டு விழாக்களாக இருந்தாலும் தமிழ்முரசு அதை செய்திகளாக வெளியிட்டு அதிக பார்வையாளர்களைச் சென்றடையவும் செய்ததாக தெரிவித்தார் குமரவேலு.
தனது இசை வெளியீடு கதை தமிழ்முரசில் வெளியானதை பற்றிப் பகிர்ந்துகொண்ட ஜோர்டன் ஜோஷுவா, 34, செய்தியை தனது சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துகொண்ட பிறகு பலர் அந்தப் பாடலை கேட்கத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார். அது தனது இசை பயணத்துக்கும் ஒரு ஊக்குவிப்பாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.
உள்ளூர் திகில் திரைப்படம் ‘விடை’ அண்மையில் சென்றாண்டு வெளியீடு கண்டது. படத்தின் துணை திரைக்கதை எழுத்தாளரும், நடிகையுமான கீர்த்தனா குமரேசன், தமிழ்முரசில் திரைப்படம் சார்ந்த செய்தி வெளியான பிறகு சமூகத்திடமிருந்து அதிக ஆதரவு கிடைத்ததாகக் கூறினார்.
அப்படம் ஷஃப்பல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படம். அங்கீகாரம் கிடைத்ததற்கு அப்பாற்பட்டு பல ஊடகத் தயாரிப்பு நிறுவனங்களும் இவர்களை அணுகியதாக கீர்த்தனா சொன்னார்.
நெயில்ட் சா நக ஒப்பனைக் கடையை நடத்திவரும் லாவண்யா சந்திரஹாசன், 32, தமிழ்முரசு நேர்காணலில் பங்கேற்று நாளிதழில் தனது தொழிலைப் பற்றிய செய்தி வெளியான பிறகு சமூக ஊடகத் தளங்களில் ரசிகர் கூட்டம் அதிகரித்ததாக சொன்னார்.
தொழில் சிறப்பாக நடைபெற்று வருவதாகப் பகிர்ந்துகொண்ட அவர் பலர் அவரது செய்தியை அவர்களின் சமூக ஊடகத் தளங்களில் பகிர்ந்துகொண்டது மட்டுமின்றி தனது தாயாரின் நண்பர்களும் பாராட்டியதாக சொன்னார்.
சுயதொழில் நடத்திவரும் சின்னத்தம்பி ராஜேஷின் கதையை தமிழ்முரசு தொழிலாளர் தினத்தன்று செய்தியாக வெளியிட்டிருந்தது.
பலர் செய்தியை படித்த பிறகு தமிழர்கள் மட்டுமின்றி தனது சீன நண்பர்களும் தன்னை பாராட்டியதாக சொன்ன ராஜேஷ், பல நிறுவனங்கள் தன்னுடன் கைகோக்கும் வாய்ப்புகளும் வந்ததாக பெருமிதத்துடன் கூறினார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ரீனா தீன், உடற்குறையுள்ளோர் மட்டும் நடித்துள்ள படம் ஒன்றை தனது சொந்த செலவில் இயக்கி, தயாரித்தும் உள்ளார்.
அவரின் திரைப்படக் கதை தமிழ்முரசு நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
செய்தி வெளியான பிறகு மிகுந்த பெருமிதம் அடைந்த ரீனா, அதன் மூலம் சிங்கப்பூரையும் தாண்டி வெளிநாடுகளிலும் தனது படத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததாக சொன்னார்.
தற்போது அவர் இரண்டு பிரத்தியேக திரைப்பட விழாவிற்கும் தனது திரைப்படத்தை சமர்ப்பித்துள்ளார்.
மேலும் விருது பெற்ற இணை தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தை நல்ல முறையில் விமர்சனமும் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட ரீனா ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார்.

