ஆ. விஷ்ணு வர்தினி
பொது அறிவு, நாட்டு நடப்புகள், மொழிவளம் போன்றவற்றை இளம்பருவத்திலேயே ஊட்டி வளர்க்க தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் காலை நேர தாய்மொழி வாசிப்புக்காக ஒதுக்கப்பட்டவை.
இந்த வாசிப்பு நேரங்களில் பெரும்பாலும் மாணவியர் கைகளில் தமிழ் முரசு மின்னிதழ் தவழ்வதைக் காணலாம்.
அப்பள்ளியில் உயர்நிலை ஒன்று முதல் நான்கு வரையிலான மாணவியரின் தமிழாசிரியர் மீனாட்சி சபாபதி தரும் ஊக்கம் இதில் பெரும்பங்கு கொண்டுள்ளது.
இளையர் முரசையும் சக மாணவர்கள் குறித்த செய்திகளையும், குறிப்பாக தமிழ் வகுப்பில் எடுத்துக்காட்டுவார் முனைவர் மீனாட்சி. அவற்றை வாசித்து உள்வாங்கிய பின்னர் அத்தலைப்புகளைப் பற்றி மாணவர்கள் கருத்து தெரிவிக்கவும் கலந்துரையாடவும் அவர் ஊக்குவிப்பதுண்டு.
தமிழ் வாய்மொழித் தேர்வுக்குத் தேவையான உலகச் செய்திகள், கட்டுரைத் தேர்வுக்குத் தேவையான சொல்வளம், இவற்றைத் தாண்டிய சீரிய அறிவையும் சமூகத் தொடர்பையும் பெறுவதற்கு தமிழ் முரசு வாசிப்பு உதவுகிறது என்பது முனைவர் மீனாட்சியின் நம்பிக்கை.
“வீவக, மசே நிதி என உள்நாட்டுச் சொற்கள், அவை குறித்த முக்கிய விவரங்கள் இவை அனைத்தையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. செய்தி வாசித்தலை வழக்கமாக்கிக் கொள்ளும்போதுதான் சமூகப் பிணைப்பும் வலுப்படுகிறது,” என்றார் முனைவர் மீனாட்சி.
தமிழ் முரசு வாசித்தலோடு நின்றுவிடாமல், மாணவச் செய்தியாளர்களை வளர்ப்பதில் முனைந்துள்ளார் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் தமிழாசிரியர் உத்தமன் கும்பலிங்கம். தமிழ் வகுப்பில் அவ்வப்போது கவிஞர்களோடும் எழுத்தாளர்களோடும் கலந்துரையாடல்களுக்கு அவர் ஏற்பாடு செய்வதுண்டு.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் பங்குகொள்ளும் மாணவர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து செய்தித் துணுக்குகளாக எழுத ஊக்குவிக்கும் திரு உத்தமன், அச்செய்திகளைத் தமிழ் முரசில் வெளியிட்டும் உள்ளார்.
“இவ்வாய்ப்புகள் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கின்றன. தங்களின் படைப்பைச் செய்தித்தாளில் பார்க்கும்போது பெரிதும் மகிழும் அவர்கள், அந்த அனுபவங்களால் தொடர்ந்து தமிழ்மொழியோடு தொடர்பில் இருக்க ஊக்கம் பெறுகின்றனர்,” என்றார் அவர்.
ஹாங்காங் நாட்டில் தமிழ்ச்சூழல் இல்லாமல் மூன்று ஆண்டுகள் இருந்து சிங்கப்பூர் திரும்பிய அப்போதைய ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவி நித்தியா ரவிந்திரன், 19, தமிழில் வாசிக்கவும் பேசவும் பெரிதும் சிரமப்பட்டார். வாய்மொழித் தேர்வுகளில் வாக்கியம் அமைப்பது அவருக்குச் சவாலாக இருந்தது. தமிழ் முரசு இணையவழிச் செய்திகளையும் செய்திக் காணொளிகளையும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டு, ஓராண்டுக்குள் தமிழில் சரளமாக பேசும் அளவு அவர் தேறியது வியக்கத்தக்கது என்று ஆசிரியர் உத்தமன் நினைவுகூர்ந்தார்.
பெண்கள் தேசிய சேவையாற்ற வேண்டுமா, சிங்கப்பூரின் நிலமீட்புப் பணிகளின் தாக்கங்கள் முதலிய பல்வேறு முக்கிய விவகாரங்கள் தமிழ் முரசு செய்திகளிலிருந்து பாடத்தலைப்புகளாக, கருத்தறிதல் பத்திகளாக திரு உத்தமனால் மாற்றப்பட்டுள்ளன. 1994ஆம் ஆண்டில் ஈசூன் டவுன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த சமயத்திலிருந்தே இவ்வழக்கம் அவருடன் தொடர்ந்துள்ளது.
“அன்றாடம் இரவு உறங்கச் செல்லும் முன்னர் ஒரு செய்தியாவது வாசிக்கவேண்டும் என மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கூறுவேன். ஏரிக்குப் பல முனைகளிலிருந்து தண்ணீர் வந்து சேரும்போதுதான் அதனைப் பாசனத்திற்குப் பயன்படுத்த முடிகிறது. அதுபோல மாணவர்களுக்குப் பலதரப்புகளிலிருந்தும் அறிவுவளம் சேர்வது அவசியம்,” என்று திரு உத்தமன் கூறினார்.
தொடக்கக் கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு நிலை மாணவர்களின் தற்போதைய தேர்வுமுறைகளுக்கு ஏட்டுக்கல்வியைத் தாண்டி உலக நடப்புகளைக் குறித்த புரிதல் தேவைப்படுகிறது. அதற்கான அறிவுவளத்தைத் தமிழ் முரசு அளிக்கவல்லது என்றார் ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் தமிழாசிரியர் கமலவாணி, 54.
தமிழ்ச் செய்திகளை வாசித்ததன் விளைவாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சிமுறை, சிங்கப்பூரில் மூத்தோருக்கான சுகாதாரக் கட்டமைப்புகள் என பல விவகாரங்களை தமது மாணவர்கள் தமிழில் ஆராயத் தொடங்கியுள்ளதை அவர் பாராட்டினார்.
தமிழ் முரசு கைப்பேசிச் செயலியின் பயன்பாட்டை மாணவர்களிடத்தில் ஊக்குவித்துவரும் அவர், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யும் செயலி மாணவர்களின் சொல்வளத்துக்கு உதவியாய் இருப்பதைக் குறிப்பிட்டார்.
“’கோட் ஸ்விட்சிங் எனப்படும் இருமொழிகளுக்கு இடையே சரளமாக இடைமாறும் திறன் சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலில் அவசியம். தமிழ் முரசு செயலியின் இருமொழி அம்சங்கள் அதற்குக் கைகொடுக்கின்றன,” என்றார் திருவாட்டி வாணி.
மாணவர்கள் தேர்ச்சி அடைவதோடு, செய்தி வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு சீரான கருத்துகளை வெளிப்படுத்தும் குடிமக்களாகவும் உருவாகவேண்டும் என்பது திருவாட்டி வாணியின் விருப்பம்.
vishnuv@sph.com.sg