15வது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு, சனிக்கிழமை மே 3ஆம் தேதி காலை 8 முதல் இரவு 8 மணி நடைபெறும்.
நாடு முழுவதும் உள்ள 1,240 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க ஏறக்குறைய 2.6 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் 10 தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் செயல்பட்டன.
வாக்களிப்பு தினமான மே 3ஆம் தேதி தமிழ் முரசின் சிறப்பு நேரடி ஒளிபரப்பானது தமிழ் முரசின் இணையத்தளம், செயலி, சமூக ஊடகத் தளங்களான யூடியூப், டிக்டாக், ஃபேஸ்புக் ஆகியவற்றில் இடம்பெறும். தமிழ்முரசின் வரலாற்றில் இப்போது முதல்முறை மின்னிலக்க வடிவங்களிலும் நேரலையாகவும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இரவு 9 மணிக்கு எஸ்பிஎச் மீடியா ‘ஸ்டூடியோ+65’ அரங்கிலிருந்து தொடங்கும் நேரடி ஒளிபரப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடிக்கும்.
இந்த நிகழ்ச்சியில் மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உட்பட பொதுத் தேர்தல் 2025 தொடர்பான பல்வேறு தகவல்கள் வழங்கப்படவிருக்கின்றன.
தேர்தல் இயக்கத்தில் பல்வேறு கட்சிகளின் தமிழ் பேசும் வேட்பாளர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்கள், பிரசாரக் கூட்ட உரைகள், செய்தியாளர் சந்திப்புகள் போன்றவற்றின் சில முக்கிய அங்கங்கள் ஒளிபரப்பப்படும்.
நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக, சிறப்புப் பேராளர்கள் மூவர் கலந்துகொள்ளும் தேர்தல் குறித்த கலந்துரையாடலைத் தமிழ் முரசு இணை ஆசிரியர் வீ.பழனிச்சாமி வழிநடத்துவார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், எங்கள் செய்தியாளர்களில் ஒருவருடன் அரங்கில் நேரடிக் கலந்துரையாடலும், பல்வேறு இடங்களில் நிகழும் தேர்தலுக்குப் பிந்திய காட்சிகள் ஆகியவற்றுடன் கட்சிகளின் ஆதரவாளர்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலிருந்து எங்கள் செய்தியாளர்கள் கள நிலவரத்தை விளக்குவார்கள்.
தமிழ் முரசு தனது மின்னிலக்கத் தளங்களில் செய்த புதுமையான, முக்கிய அம்சங்கள் பற்றிய விளக்கத்தைத் தமிழ் முரசின் ஊடக வாசக, வளர்ச்சி ஆசிரியர் எஸ். வெங்கடேஷ்வரன் ஒரு கலந்துரையாடல்வழி எடுத்துரைப்பார்.