சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் (என்யுஎஸ்) பட்டமேற்கல்வி, திறன் பரிமாற்றம் போன்றவற்றில் ஒத்துழைப்பை விரிவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு இணக்கம் கண்டுள்ளது.
தமிழக அரசின் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பான ‘கைடன்ஸ் தமிழ் நாடு’, என்யுஎஸ் என இருதரப்பும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.
இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அரசாங்க, தனியார் பல்கலைக்கழகங்கள், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் மாணவர் பரிமாற்றத் திட்டம், தொழில்துறை சார்ந்த திட்டங்கள், முதுநிலைக் கல்வி வகுப்புகள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் விரிவாக ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியமாகும்.
மேலும், தமிழக மாணவர்கள் என்யுஎஸ்சில் முதுநிலைக் கல்வி, ஆய்வுக் கல்வி போன்றவற்றை மேற்கொள்ள புதிதாக உபகாரச் சம்பளம் வழங்குவதும் நோக்கம்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் இந்தியாவின் மாநில அரசு ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது இதுவே முதன்முறை.
பல்கலைக்கழகத்தின் முதுநிலைக் கல்வித் திட்டங்களுக்கான இடைக்காலத் துணைத் தலைவர் ஆங் வீ ஹான், ‘கைடன்ஸ் தமிழ் நாடு’ அமைப்பின் நிர்வாக மேலாளரும் தலைமை நிர்வாகியுமான தீபக் ஜேக்கப் இருவரும் அதில் கையெழுத்திட்டனர்.
“தமிழ் நாட்டில் தொடர்ச்சியான செயல்பாட்டை உருவாக்க விரும்புகிறோம். முதுநிலை, ஆய்வுக்கல்வி மாணவர்களைக் கொண்ட, வருங்கால வேலைவாய்ப்புகளுக்குத் தயாராக இருக்கும் திறமையாளர்களின் பட்டியலை உருவாக்குவதன் மூலம், அந்த மாணவர்கள் ஆசியான் வட்டார வளர்ச்சிக்கு விரிவாகப் பங்களிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்று பேராசிரியர் ஹான் கூறினார்.
மேலும், வருங்காலத்துக்குத் தயார்ப்படுத்தும் அதே நேரத்தில் கலாசார, மரபுகளில் ஆழ வேரூன்றியிருக்கும் கல்வி அனுபவத்தை இந்திய மாணவர்களுக்கு வழங்க என்யுஎஸ் ஆர்வமாக உள்ளது என்றார் அவர்.
“ஒரே மாதிரியான சிந்தனையும் கல்வி உன்னதத்திற்கான கடப்பாடும் கொண்டிருப்பதால் என்யுஎஸ் இந்தியாவில் அதன் பயணத்தைத் தொடங்குவதற்கான இடமாகச் சென்னை அதன் கவனத்தை ஈர்த்தது. எங்கள் மாணவர்களின் வேலை நியமனத் தகுதி, உலகளாவிய தயார்நிலை ஆகியவற்றை மேம்படுத்துவது எங்கள் இலக்கு,” என்று இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான தீபக் ஜேக்கப் குறிப்பிட்டார்.
கையெழுத்து நிகழ்ச்சி சென்னையில் உள்ள ‘ஐடிசி கிராண்ட் சோழா’ ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு முதுநிலைக் கல்வி வாய்ப்புகளைத் தெரிந்துகொள்வதற்கான நிகழ்ச்சிக்கும் நிபுணத்துவ வகுப்புகளுக்கும் என்யுஎஸ் ஏற்பாடு செய்திருந்தது. கிட்டத்தட்ட 1,000 பேர் அவற்றில் கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழகத்தின் 14 துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் நிர்வாகப் பிரிவு ஊழியர்களும் தங்கள் துறை சார்ந்த கல்வித் திட்டங்கள் குறித்து வந்திருந்தோர்க்கு விளக்கமளித்தனர். வர்த்தகம், மருத்துவம், பொறியியல், சமூக அறிவியல், கலை, பொதுக் கொள்கை போன்ற துறைகளும் அவற்றில் அடங்கும்.
வெள்ளிக்கிழமை, தொழில்துறைத் தலைவர்களும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்ட சந்திப்பையும் என்யுஎஸ் ஏற்றுநடத்தியது.


