இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான உயர்கல்வி நிறுவனங்கள்

2 mins read
dcdc3c2f-9b60-4d63-b611-9c0ee3c04804
தமிழ்நாட்டில் தரமான 17 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளதால் அது முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய அளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

முதல் நூறு இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 17 உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று உள்ளன.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தரமான உயர் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளதால் பட்டியலில் அது முதலிடத்திற்கு வந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, 11 உயர் கல்வி நிறுவனங்களுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒன்பது உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

நூறு நிறுவனங்களின் பட்டியலில் சென்னையில் உள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனம் தரவரிசையில் முதலிடத்தையும் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாம் இடத்தையும் புதுடெல்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இவ்வாண்டுக்கான என்ஐஆர்எஃப் (NIRF) எனப்படும் தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் தேர்வுப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சு வியாழக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்டது.

இந்தியா முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் வகையில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

கற்றல்-கற்பித்தல் நடைமுறைகள், அதற்கான வளங்கள், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்த தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படுகிறது.

இவ்வாண்டுக்கான பட்டியல் 16 பிரிவுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் 17 உயர் கல்வி நிறுவனங்களில் கோவை அமிர்த விஷ்வ வித்யபீடம் (17), வேலூர் விஐடி (21), சென்னை எஸ்ஆர்எம் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (22), சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (23), அண்ணா பல்கலைக்கழகம் (29) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

குறிப்புச் சொற்கள்