தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழர் பேரவையின் தேசிய தின விருந்து நிகழ்ச்சி

3 mins read
நற்பணிப் பேரவையின் முன்னாள் தலைவர் ராமமூர்த்திக்குச் சமூகச் சேவை சிறப்பு விருந்து; உன்னத இளையர் விருதினைப் பெற்றார் ஊடகவியலாளர் இலக்கியா செல்வராஜி
cca1c43f-7505-4020-a760-f3dcbd7a6fe0
(இடமிருந்து) உன்னத இளையர் விருது வென்ற இலக்கியா செல்வராஜி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், மாண்புமிகு சமூகச் சேவை விருது பெற்ற நற்பணிப் பேரவையின் முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, தமிழர் பேரவைத் தலைவர் வெ. பாண்டியன் ஆகியோருடன் ஏற்பாட்டுக் குழுவினர் நிகழ்ச்சி மேடையில் கூடியுள்ளனர். - படம்: லாவண்யா வீரராகவன்

வேறுபாடுகளைக் கடந்து ஒரே சிங்கப்பூர் எனும் நிலையை இந்நாடு அடைந்துள்ளது என்றும் அந்த பயணத்தில் தமிழர் பேரவையின் பங்கு இன்றியமையாதது என்றும் சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் தெரிவித்துள்ளார் .

தமிழர் பேரவை, அதன் இணை அமைப்புகள் இணைந்து ஆண்டுதோறும் கொண்டாடும் தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய திரு டோங் இவ்வாறு கூறினார்.

சிங்கப்பூரில் தமிழர் வருகை இரு நூற்றாண்டுக்கும் முன்னே நிகழ்ந்ததாகவும், ஊழியர்களாக, வர்த்தகர்களாக, படைவீரர்களாக, ஆசிரியர்களாக, நிர்வாகிகளாக அனைத்து துறைகளிலும் தமிழர்கள் செயலாற்றியுள்ளதையும் திரு டோங் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

தமிழை வாழும் மொழியாக வைத்திருக்க உதவும் அமைப்புகளையும் அவர் புகழ்ந்தார். தென்கிழக்கு ஆசியாவில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு சமூகத்தில் தமிழைச் செழிக்க வைப்பதையும் சுட்டிக் காட்டிப் புகழாரம் சூட்டினார்.

தமிழர் பேரவை குறித்தும், அவ்வமைப்பு கலை, கலாசாரம், மரபு, வாழ்க்கைச் சூழல் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆற்றும் பணி குறித்தும் இந்தியச் சமூகம் பெருமை கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

ஏறத்தாழ 400 பேர் பங்கேற்ற இவ்விருந்து நிகழ்ச்சி, ஆகஸ்டு 30ஆம் தேதியன்று, கத்திப் உள்துறைக் குழுவின் தேசிய சேவையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இவ்வாண்டுக்கான மாண்புமிகு சமூகச் சேவை விருது 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமூக அமைப்புகளில் பணியாற்றிவரும் திரு ராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

நற்பணிப் பேரவையில் ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2025 வரை தலைவராகச் செயல்பட்ட திரு ராமமூர்த்தி, தாம் ஆற்றிய தொண்டுக்குக் கிடைத்த அங்கீகாரம் இது என்றும், தொண்டூழியத்துக்குக் கிடைத்த விருது என்றும் சொன்னார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியச் சமூக அமைப்புகள் செயல்படும் விதம் மாறியுள்ளதாகக் கூறிய அவர், “அமைப்புகளில் இளையர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. இளையர்களை ஈர்ப்பதிலும் சவால் நிலவுகிறது. அதனை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த சமூகச் சேவைக்கான விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாண்டு ‘உன்னத இளையர் விருது’ புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விருதை, ஒளிபரப்பு ஊடகவியலாளர் இலக்கியா செல்வராஜி பெற்றுக்கொண்டார்.

இளையர்களுக்கென முதன்முறையாக அளிக்கப்படும் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாகத் திருவாட்டி இலக்கியா கூறினார்.

“மொழியிலும், சமூகத்திலும் இயன்ற அளவு ஆற்றிய பணிகள் கவனிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது சிறப்பானது. இது என்னை மேலும் செயல்பட ஊக்குவிப்பதுடன், மேன்மேலும் நிறைய இளையர்களுக்கும் ஊக்குவிப்பாக அமையும் என நம்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“இளையர்கள் கலைகள், புகைப்பட, ஒளிப்படக்கலை, தொண்டூழியம் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது ஆர்வங்களை ஒட்டிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டால் அவர்களது பங்களிப்பு கூடுமென்பதில் ஐயமில்லை,” என்றும் அவர் சொன்னார்.

“தமிழர் பேரவையுடன் ஏறத்தாழ 39 இணை அமைப்புகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. இந்திய சமூகத்தினருடன் ஒன்றிணைந்து தேசிய தினத்தைக் கொண்டாடுவது இதன் தலையாய நோக்கம்,” என்றார் தமிழர் பேரவைத் தலைவர் வெ. பாண்டியன். இந்நிகழ்ச்சி சமூகத்தில் அளப்பறிய பங்காற்றும் தலைவர்களைச் சிறப்பித்து வருவதாகவும் திரு பாண்டியன் கூறினார்.

இளையர்களின் பங்களிப்பை ஊக்குவித்து, மேலும் பல இளையர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய விருது அறிமுகம் கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சி அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்துக் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதாக தமிழர் பேரவையின் துணைத் தலைவரும், நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான விக்னேஸ்வரன், 31, தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்