சிங்கப்பூர் தனது அறுபதாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வேளையில், தமிழ்மொழியின் வளர்ச்சியையும் பல்வேறு சமூக அமைப்புகளின் பங்களிப்பையும் பேசும் ஆவணக் குறுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
‘தமிழ்’ எனும் அக்குறுந்தொடரின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை (செப்டம்பர் 17) விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘தி பாட்’ அரங்கில் நடைபெற்றது. இதில் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு உள்ளிட்ட முக்கிய அமைப்புகளைச் சேர்ந்த பேராளர்கள் பங்கேற்றனர்.
தமிழ் வளர்ச்சிக்குப் பங்களித்த பல துறை முன்னோடிகளைக் குறித்த உரைகளும் மொழி வளர்ச்சிகுறித்து இளையர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றன.
மீடியாகார்ப் வழங்கும் பத்துப் பாகங்கள் கொண்ட இத்தொடரை முகமது அலி இயக்கியுள்ளார்.
“சிங்கப்பூர்ச் சமூகத்தில் பல்லாண்டுகளாக, பல்வேறு சவால்களைக் கடந்து செழித்து வாழ்ந்து வருகிறது தமிழ்மொழி. இதற்குப் பின்னால் பல முன்னோடிகளின் உழைப்பு அடங்கியுள்ளது. அவை நூற்றாண்டுகள் கடந்து போற்றப்பட வேண்டும் எனும் நோக்கில் இத்தொடரினை எடுத்துள்ளோம்,” என்றார் முகமது அலி.
தமிழ் முரசு உட்பட பல துறைகளைச் சேர்ந்த அமைப்புகள், அவர்களது பயணம் குறித்து விரிவாகப் பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முகமது ஹாசிக் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்நிகழ்ச்சி, செப்டம்பர் 18ஆம் தேதிமுதல் வியாழக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பாகவுள்ளது.