இருவர் மரணமுற்ற தெம்பனிஸ் விபத்து: தப்பியோடிய ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு

இருவர் மரணமுற்ற தெம்பனிஸ் விபத்து: தப்பியோடிய ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

31 Oct 2026 - 9:40 am

2 mins read

தெம்பனிஸ் அவென்யூ 12ல் நிகழ்ந்த கோர விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டியும் கர்ப்பிணியாக இருந்த அவரின் மனைவியும் பலியான சம்பவத்தில், காரை ஓட்டிய ஆடவர்மீது சனிக்கிழமை (அக்டோபர் 31) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மரணத்தை விளைவித்த அளவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, விபத்துக்குப் பின்னர் வாகனத்தை நிறுத்தத் தவறியது, பாதிக்கப்பட்டோர்க்கு உதவத் தவறியது, உரிய காப்புறுதியின்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள், முகம்மது ஸுல்ஃபிக்கர் அப்துல் அஸிஸ் எனும் அந்த 30 வயது ஆடவர்மீது சுமத்தப்பட்டன.

அவர் நீதிமன்றத்தில் காணொளிமூலம் தோன்றினார். குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது ஆடவர் தலைகுனிந்து நின்றார்.

அக்டோபர் 29ஆம் தேதி இரவு மணி கிட்டத்தட்ட 10.35க்கு நிகழ்ந்த இந்த விபத்தில், சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு பாய்ந்த நீலநிற ஆடி கார், தம்பதி சென்ற மோட்டார்சைக்கிள்மீதும் மற்றொரு கார்மீதும் மிக வேகமாக மோதியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியான 24 வயது முகமது எமிருல் டேனியல், அவரின் மனைவி நூர்சியராஃபானா நோரஸ்மான் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். இத்தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

மாண்ட இருவரும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இரண்டாம் குழந்தையை எதிர்பார்த்திருந்ததாகச் சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் நடந்த இறுதிச்சடங்கின்போது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய மற்றொரு காரின் 25 வயது ஓட்டுநரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்திய பிறகு ஓட்டுநரும் அவருடன் இருந்த 29 வயது பெண் பயணியும் விபத்தில் காயமடைந்தோர்க்கு எந்த உதவியும் செய்யாமல் காரை அங்கேயே விட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடினர்.

தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவர்களை அடையாளம் கண்டு, அக்டோபர் 30ஆம் தேதி வெஸ்ட் கோஸ்ட் ரோட்டுக்கு அருகே கைது செய்தனர்.

விசாரணையில் அந்த ஆடவர், ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்பட்ட நிலையில், போலி உரிமத் தகட்டுடன் பதிவை நீக்கிய காரை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆடவருக்குப் பிணை மறுக்கப்பட்டது. அவரின் வழக்கு நவம்பர் 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

அந்தப் பெண்மீது குற்றம் சுமத்தப்படவில்லை. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்