பிப்ரவரி விற்பனையில் தெம்பனிஸ், புக்கிட் மேரா பிடிஓ திட்டங்களுக்கு அதிக வரவேற்பு

பிப்ரவரி விற்பனையில் தெம்பனிஸ், புக்கிட் மேரா பிடிஓ திட்டங்களுக்கு அதிக வரவேற்பு

2 mins read
5d5b6d70-f150-4cac-a66e-216ab3de7351
தெம்பனிஸ் நோவா பிடிஓ வீடுகளின் மாதிரி வடிவம். - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

தெம்பனிஸ் திட்டங்களுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வருவது எதிர்பார்க்கப்பட்டதே என சொத்து பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர். காரணம், அவை வளர்ச்சி பெற்ற நகர்ப்பகுதியில் அமைந்து, பல வசதிகளுக்கு அருகில் இருப்பதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்த காத்திருப்பு காலத்தையும் கொண்டுள்ளன.

குறிப்பாக தெம்பனிஸ் நோவா, தெம்பனிஸ் சென்ட்ரல் பகுதியில் புதிய வளர்ச்சிக்கான நிலங்கள் குறைவாக உள்ள சூழலில் கிடைத்த அரிய தளமாகும் என்று ரியலியன் (OrangeTee & ETC) குழுமத்தின் முதன்மை பகுப்பாய்வாளரும் உத்திபூர்வ நிபுணருமான கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.

“எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் திட்டங்கள், அவை வழங்கும் வசதியால், வாங்குபவர்களைத் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டே இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.

புக்கிட் மேராவில் உள்ள ரெட்ஹில் பீக்ஸ் திட்டத்தின்கீழ், விற்பனைக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் என மிக நீண்ட காத்திருப்பு காலம் இருந்தபோதிலும், 593 நான்கு அறை வீடுகளுக்கு 1,982 விண்ணப்பங்களைப் பெற்றது. இந்த வீடுகள் 12 விழுக்காடு மானியம் திரும்பப் பெறுதல் விதிமுறையுடன் வழங்கப்படுகின்றன.

இந்த ‘பிரைம்’ வீடுகளுக்கு முதல் முறையாக விண்ணப்பிப்போரின் விகிதம் இரண்டாகப் பதிவானது. அதாவது, கிடைக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் இரு விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.

2025ஆம் ஆண்டில், ரெட்ஹில் பீக்ஸ் திட்டத்தின் முதல் கட்டமாக, அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட 1,021 வீடுகள் உட்பட, அந்த நகர்ப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.

மொத்தத்தில், பிப்ரவரி வெளியீட்டில் புக்கிட் மேரா, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய பகுதிகளில் 4,692 வீடுகள் விற்பனைக்கு உள்ளன.

புதன்கிழமை (பிப்ரவரி 11) அன்று மாலை 5 மணி நிலவரப்படி, பிப்ரவரி விற்பனைக்கான மொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 14,052 ஆக இருந்தது. இதன் மூலம் மொத்த விண்ணப்ப விகிதம் 3 ஆகக் கணக்கிடப்படுகிறது. இது அண்மைய இரண்டு விற்பனைகளான 2025 அக்டோபர் (3.4) மற்றும் 2025 ஜூலை (4.2) விற்பனைகளை விட குறைவானதாகும்.

பிப்ரவரி விற்பனையில் வரிசை எண் பெறுபவர்கள், ஜூலை முதல் நவம்பர் வரை தோ பாயோவில் உள்ள வீவக நடுவத்தில் தங்களின் குடியிருப்பைத் தேர்வு செய்து பதிவு செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்