முதல்முறை வீடு வாங்குவோரிடையே தெம்பனிஸ், ஹாலந்து வில்லேஜ் பிடிஓ திட்டங்கள் பிரபலம்

முதல்முறை வீடு வாங்குவோரிடையே தெம்பனிஸ், ஹாலந்து வில்லேஜ் பிடிஓ திட்டங்கள் பிரபலம்

1 mins read
0a5df344-c842-4b39-8514-4b9e3a7b410f
குவீன்ஸ்டவுனில் அமையவுள்ள ஹாலந்து விஸ்தா பிடிஓ திட்டத்துக்கான இடம், தற்போது கார் நிறுத்துமிடமாக உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதல்முறை வீடு வாங்குவோரிடையே தெம்பனிசிலும் ஹாலந்து வில்லேஜிலும் உள்ள தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) திட்டங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

ஜூன் மாத வீட்டு விற்பனை நடவடிக்கையின்கீழ், புதன்கிழமை (ஜூன் 26) மாலை 5 மணி நிலவரப்படி, தெம்பனிஸ் கிரீன் தோப்பேஸ் திட்டத்தில் உள்ள 214 நாலறை வீடுகள், 174 ஐந்தறை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் முதல்முறை வீடு வாங்கும் எட்டுப் பேர் விண்ணப்பித்தனர்.

அந்த வீட்டுத் திட்டத்துக்கான காத்திருப்புக் காலம் மூன்று ஆண்டுகள், ஒரு மாதம். தெம்பனிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே அந்தத் திட்டம் அமையும். அதன் நான்கு புளோக்குகளில் ஒன்றில் ஈரறை வாடகை வீடுகளும் இருக்கும்.

குவீன்ஸ்டவுனில் உள்ள ஹாலந்து விஸ்தா திட்டத்தில் அமையும் 228 நாலறை வீடுகள் 2,100 விண்ணப்பதாரர்களை ஈர்த்தன. ஜூன் விற்பனை நடவடிக்கையில் இந்தத் திட்டத்துக்கே காத்திருப்புக் காலம் ஆக அதிகமாக நான்கு ஆண்டுகள், ஒன்பது மாதங்களாக உள்ளது. 2012க்குப் பிறகு அவ்வட்டாரத்தில் அமையும் முதல் பொது வீடமைப்புத் திட்டம் இதுவாகும்.

முதன்மை வட்டார பொது வீடமைப்பு முறையின்கீழ் வரும் இந்த வீடுகளுக்கான விண்ணப்ப விகிதம், முதல்முறை வீடு வாங்குவோரிடையே 6.2 ஆக உள்ளது.

ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஈசூன் என எட்டுத் திட்டங்களில் மொத்தம் 6,938 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. வீவக வீட்டு இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் புதன்கிழமை (ஜூன் 26) இரவு 11.59 மணிக்கு நிறைவுபெறும்.

குறிப்புச் சொற்கள்