தெம்பனிஸ் கடைத்தொகுதியின் $24 மில்லியன் செலவிலான புதுப்பிப்புப் பணிகள் இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளன.
புத்துயிர் பெற்ற வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடுதலான அழகுப் பராமரிப்புக் கடைகளும் உணவகங்களையும் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.
கெபிடலேன்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் 31 ஆண்டுகால கடைத்தொகுதி 1995ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மேம்பாட்டுப் பணிகள் முடிந்து புதிதாக 21 நிறுவனங்கள் அவற்றின் கடைகளை அங்கு அறிமுகம் செய்யவிருக்கின்றன.
கடைத்தொகுதியில் மீண்டும் கால்பதிக்கும் நிறுவனங்கள் அவற்றின் கடைகளையும் புதுப்பித்துள்ளன.
அழகுப் பராமரிப்பில் மீண்டும் திறக்கப்படும் தெம்பனிஸ் கடைத்தொகுதி கவனம் செலுத்தவிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 14 அழகுப் பராமரிப்புக் கடைகள் அங்கு அமைந்திருக்கும் என்றது கெபிடலேன்ட்.
பல உணவு, பானக் கடைகள் தெம்பனிஸ் கடைத்தொகுதியில் அங்கம் வகிக்கின்றன. அவை, தீவின் கிழக்குப் பகுதியில் முதல்முறையாகத் திறக்கப்படுவதாகக் குறிப்பிட்டன.
விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிகப் பெரிய ‘டெக்கத்லோன்’ கடை தெம்பனிஸ் கடைத்தொகுதிக்குத் திரும்புகிறது. ஏறக்குறைய 18,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கடையில் 60 விளையாட்டுகளைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட பொருள்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லலாம்.
தெம்பனிஸ் ரயில் நிலையத்திற்கும் பேருந்து முனையத்துக்கும் அருகில் அமைந்துள்ள எட்டு மாடி கடைத்தொகுதி, 160க்கும் அதிகமான கடைகளைக் கொண்டிருக்கும்.
