தெம்பனிசில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தின் தொடர்பில் 53 வயது ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்து ஆறு மணிநேரத்திற்குள் முகம்மது சுஃபியான் முகம்மது சப்ரி எனும் அந்த ஆடவர் பிடிபட்டார். திரு முகம்மது ஹைரில் பெய்ன்சைக் கத்தியால் குத்தியதாக அவர்மீது நீதிமன்றத்தில் சனிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
கத்திக்குத்துக்கு ஆளானவரின் வயது நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை. அவரின் இடது முழங்கையிலும் முதுகுப் பகுதியின் வலது கீழ்ப்பகுதியிலும் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன.
தெம்பனிஸ் சென்ட்ரல் 1ல் உள்ள யு-டேஸ்ட் காப்பிக் கடைக்கு அருகில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.55க்குச் சம்பவம் நடந்தது.
அப்போது அங்கு அதிகக் கூட்டம் இருந்தது.
தெம்பனிஸ் பெரு விரைவு நிலையத்திற்கும் தெம்பனிஸ் கடைத்தொகுதிக்கும் இடையில் திறந்தவெளிச் சந்தைகளுக்கான கூடாரமிடப்பட்ட பகுதியில் சத்தம் கேட்டதாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர். அதன் பிறகு ரத்தம் தோய்ந்த சட்டையுடன் ஆடவர் ஒருவரைக் கண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினரும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது பாதிக்கப்பட்ட ஆடவர் சுய நினைவுடன் இருந்தார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, சுஃபியான், தண்டனைக் குறைப்பு உத்தரவின்கீழ் இருக்கிறார். இவ்வாண்டு (2025) அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய உத்தரவுக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி முடிவுறும் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை நிறைவேற்றிய கைதிகளில் பெரும்பாலோர், நன்னடத்தையின் அடிப்படையில், விடுவிக்கப்படுவர் என்று சிங்கப்பூர் சிறைச் சேவையின் இணையத்தளம் கூறுகிறது. அவ்வாறு விடுவிக்கப்படும்போது அவர்களுக்கு நிபந்தனையுடன்கூடிய தண்டனைக் குறைப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும். குறிப்பிட்ட அந்தக் காலத்தில் அவர்கள் மீண்டும் குற்றம் புரியக்கூடாது என்பது அடிப்படை நிபந்தனை.
தெம்பனிஸ் சம்பவத்தைத் தொடர்ந்து சுஃபியான் அந்த உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே ஆயுதத்தால் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குத் ஒருவரைத் தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும். பிரம்படி கொடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

