ஹெல்த்சிட்டி நொவீனா பெருந்திட்டம்: பெரிதாகவிருக்கும் அவசரகாலப் பிரிவு

டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய மருத்துவக் கட்டடத்தில் கூடுதலாக 600 படுக்கைகள்

2 mins read
97f22321-2298-4203-a0a0-bd890ccd6c4b
டான் டான் செங் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாங் கோங் சூங்கும் (இடம்) சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் (நடு) செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) ஹெல்த்சிட்டி நொவீனா பெருந்திட்டத்தின் இரண்டாம் கட்ட மாதிரி வடிவத்தைப் பார்வையிட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கூடுதலாக 600 படுக்கைகள் கிடைக்கவிருக்கின்றன. அதன் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவும் பெரிதாகவிருக்கிறது. முன்னைய இரண்டாம் தொற்றுநோய் நிர்வாக நிலையத்தையும் இரண்டாம் இணைப்புக் கட்டடத்தையும் புதிய மருத்துவக் கட்டடமாக உருமாற்றத் திட்டமிடுகிறது மருத்துவமனை.

தீவிரக் கவனிப்பு உடனடியாகத் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவது நோக்கம். கடுமையான, சிக்கலான பிரச்சினைகளுடன் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் வரும் நோயாளிகளுக்கு உடனடி நிபுணத்துவச் சிகிச்சை வழங்கத் திட்டம் துணைபுரியும்.

நோயாளிகள் சிகிச்சைக்குக் காத்திருக்கும் நேரம் குறையும். அதனால் முதன்மை, உயர்நிலை, சமூகப் பராமரிப்புச் சேவைகளுக்கு இடையில் அவர்கள் எளிதாக மாறிக்கொள்ள முடியும்.

ஹெல்த்சிட்டி நொவீனா பெருந்திட்டத்தின் இரண்டாம் கட்டமாகப் புதிய மருத்துவக் கட்டடத்தின் மாதிரி வடிவம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) வெளியிடப்பட்டது.

இரண்டாம் கட்டம் குறித்துப் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், “சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படையும் நிலையில் அதன் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் சிக்கலாகின்றன. நெடுங்காலமாக இருக்கும் மருத்துவ நிலையங்களை மெருகூட்டுவது மட்டும் போதாது, பெரிய அளவில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் சேவைகளை மறுஆய்வு செய்யவேண்டும்,” என்றார்.

முதற்கட்டத்தின் சாதனைகளுக்கு ஆதரவாகப் புதிய கட்டம் இயங்கும் என்றும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் சொன்னார். முதற்கட்டத்தின் பணிகள் கடந்த ஆண்டு (2024) நிறைவுற்றன.

“இரண்டாம் கட்டத்தில் புதிய சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் அறிமுகம் காணும். வந்துபோகும் நோயாளிகளின் எண்ணிக்கையைச் சீராக வைத்திருக்கவும் செயல்முறைகளில் புத்தாக்கத்தைக் கொண்டுவரவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார் திரு ஓங்.

டான் டோக் செங் மருத்துவமனை, என்எச்ஜி ஹெல்த் அமைப்பின்கீழ் செயல்படுகிறது.

சிங்கப்பூரின் மத்திய, வட பகுதிகளில் வசிப்போருக்குக் கூடுதல் மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தேவைப்படுவோருக்கு உடனடிச் சிகிச்சைகள் வழங்கவும் பெருந்திட்டத்தை அமைப்பு வகுத்துள்ளது.

அந்தத் திட்டத்தில் டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய கட்டடம் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மக்களின் மாறுபட்ட தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் என்எச்ஜி ஹெல்த் அமைப்பு படிப்படியாக அதன் உள்கட்டமைப்பை விரிவாக்குவதோடு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்