புதிய வசதிகளுடன் தானா மேரா படகு முனையம் திறப்பு

2 mins read
57ffa9de-e611-4706-88ff-3a6a73b33aec
போக்குவரத்து, சட்ட துணையமைச்சர் முரளி பிள்ளை புதிய வசதிகளுடன் உள்ள தானா மேரா படகு முனையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். - படம்: சாவ்பாவ்

தானா மேரா படகு முனைத்தில் குடிநுழைவுச் சோதனைகளை இனி ஐந்தே நிமிடங்களில் கடந்துவிடலாம். புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் 8 குடிநுழைவுச் சோதனைத் தடங்கள் மூலம் அது சாத்தியமாகிறது.

தானா மேரா படகு முனையத்தில் குடிநுழைவுச் சோதனையைக் கடக்க வழக்கமாகக் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆகும். அதைக் குறைக்க உதவியுள்ளது 20 மில்லியன் வெள்ளி செலவில் அமைக்கப்பட்ட புதிய குடிநுழைவுத் தடங்கள்.

சுயமாகக் குடிநுழைவுச் சோதனையைக் கடப்பதற்கான வசதி, பயணப் பெட்டிகளைச் சரிபார்க்கும் தானியக்க வசதி, கடப்பிதழ் இல்லா குடிநுழைவு தடங்கள் ஆகியவை படகு முனைத்தின் சில சிறப்பு அம்சங்கள்.

ஓராண்டு மேம்பாட்டுப் பணிகளுக்குப் பின் தயாரான முனையத்தை போக்குவரத்து, சட்ட துணையமைச்சர் முரளி பிள்ளை (மார்ச் 22) அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

படகு முனையத்தில் பயணிகள் சுயமாகக் குடிநுழைவுச் சோதனையை மேற்கொள்வதற்கான வசதிகள் உண்டு.
படகு முனையத்தில் பயணிகள் சுயமாகக் குடிநுழைவுச் சோதனையை மேற்கொள்வதற்கான வசதிகள் உண்டு. - படம்: சாவ்பாவ்

சுயமாகக் குடிநுழைவுச் சோதனையை மேற்கொள்ள 15 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இவ்வாண்டு நடுப்பகுதிக்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் மூலம் 70 விழுக்காட்டுப் பயணிகள் அதிகாரிகள் இன்றி சுயமாகக் குடிநுழைவுச் சோதனையைக் கடப்பதற்கான வசதியைப் பயன்படுத்துவர் என்று சிங்கப்பூர் சொகுசுப்படகு நிலையம் தெரிவித்தது.

தானா மேரா படகு முனையத்தில் பயணச்சீட்டுகளைத் தொடர்ந்து வாங்க முடியும். படகில் ஏறுவதற்கான போர்டிங் பாஸ் எனும் அனுமதிச்சீட்டுகளைப் பெற முடியும். முன்கூட்டியே பயணத்துக்குப் பதிவுசெய்வோர் வரிசையைத் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் தானியக்க முறையில் நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கான வசதியையும் தானா மேரா படகு முனையத்தில் எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூருக்குள் வந்துசெல்லும் சிங்கப்பூர்ப் பயணிகள் முக அடையாளத்தையும் கண் அடையாளத்தையும் வைத்து கடப்பிதழ் இன்றி குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்கலாம்.

அது சிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பொருந்தும்.

அதன் மூலம் குடிநுழைவுச் சோதனைக்கான நேரம் 10 விநாடிகள் வரை குறையும். இருப்பினும் தேவை ஏற்பட்டால் விவரங்களைச் சரிபார்க்க பயணிகள் கடப்பிதழ்களைக் கையில் வைத்திருப்பது நல்லது என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

தானா மேரா படகு முனையத்தின் வருகையாளர்களுக்கான தடங்களையும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் 12லிருந்து 26க்கு அதிகரித்துள்ளது. புறப்பாட்டுக்கான தடங்கள் 12லிருந்து 20க்குக் கூடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்