தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தஞ்சோங் காத்தோங் புதைகுழி நிரப்பப்பட்டுவிட்டது

2 mins read
2c8f032d-c42e-461d-a5a2-1cd1bd8640ea
புதைகுழி நிரப்பப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் ஏற்பட்ட புதைகுழி நிரப்பப்பட்டுவிட்டது.

நிலப் போக்குவரத்து ஆணையம் சில சோதனைகளை நடத்திய பிறகு அந்தச் சாலை போக்குவரத்துக்கு உகந்த வகையில் மறுபடியும் போடப்படும்.

மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான போ பெய் மிங் திங்கட்கிழமை (ஜூலை 28) ஃபேஸ்புக்கில் இத்தகவலை வெளியிட்டார். நிலத்தடி மண்ணில் காற்று புகுந்து அடைத்துக்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய நடத்தப்படும் சோதனை உள்ளிட்டவற்றை நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத்தின் ஒரு பகுதியில் புதைகுழி உருவானது. அக்குழி ஒரு காரையும் அதன் ஓட்டுநரையும் விழுங்கியது.

அந்த ஓட்டுநர் மீட்கப்பட்டு ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு லேசான தசை வலி இருந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. அவ்வழியே போகும் பேருந்துச் சேவைகளும் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளன.

சோதனைகளை நடத்தவும் அவற்றின் முடிவுகளை ஆராயவும் காலம் பிடிக்கும் என்றார் உள்துறை மற்றும் சமுதாய, குடம்ப மேம்பாட்டு துணை அமைச்சருமான திரு கோ.

“சாலை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள குடியிருப்பாளர்கள் ஆவலாக இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சாலையை மீண்டும் திறக்கும் முன்பு அது பாதுகாப்பாக இருப்பதை நன்கு உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு நேரம் தருவதே சிறந்தது என நினைக்கிறேன்,” என்றும் அவர் பதிலளித்தார்.

பெண்ணை மீட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கெளரவிப்பு

இந்நிலையில், புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்ட வெளிநாட்டு ஊழியர்களைத் தாம் நேரில் சந்தித்ததாகக் கலாசார, சமூக, இளையர் மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் ஃபேஸ்புக்கில் காணொளிவழி தெரிவித்துள்ளார்.

பெண்ணை மீட்ட வெளிநாட்டு ஊழியர்கள் எழுவரை, அவர்கள் தங்கியிருக்கும் தங்குவிடுதிகளில் சந்தித்து மனிதவள அமைச்சின் பாராட்டைத் தெரிவித்து அதை அங்கீகரிக்கும் விதமாக நாணயம் ஒன்றைத் தாம் வழங்கியதாக திரு தினே‌ஷ் தெரிவித்தார்.

குறிப்பாகக் கட்டுமானத் துறையில் சிஙகப்பூரை உருவாக்கப் பங்காற்றுவதுடன், தேவைப்படும் வேளைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்; அதற்கு இச்சம்பவம் சான்று என்றார் திரு தினே‌ஷ்.

குறிப்புச் சொற்கள்