தஞ்சோங் காத்தோங் புதைகுழி: கட்டுமான நிறுவனம் மீதும் அறுவர் மீதும் குற்றச்சாட்டு

தஞ்சோங் காத்தோங் புதைகுழி: கட்டுமான நிறுவனம் மீதும் அறுவர் மீதும் குற்றச்சாட்டு

2 mins read
பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது
48557906-9140-4095-8797-bb4117afa29e
தஞ்சோங் காத்தோங் சவுத் ரோட்டில் 2025 ஜூலை 26ஆம் தேதி திடீரென புதைகுழி ஏற்பட்டது. - படம்: சாவ்பாவ்

தஞ்சோங் காத்தோங் ரோட்டில் 2025 ஜூலையில் புதைகுழி ஏற்பட்டதைத் தொடர்ந்து நடந்த விசாரணைக்குப் பிறகு, ஒரு கட்டுமான நிறுவனம் மீதும் ஆறு தனிநபர்கள் மீதும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11) குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேநாளில் நிலப் போக்குவரத்து ஆணையம், கட்டடக் கட்டுமான ஆணையம், மனிதவள அமைச்சு ஆகிய அரசாங்க அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் விபத்து குறித்த தனிப்பட்ட விசாரணைகளை அவை நிறைவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தன.

அந்த எதிர்பாராத விபத்தில், ஒரு பெண் கார் ஓட்டுநர் வாகனத்துடன் புதைகுழியில் விழ நேரிட்டது. காயமடைந்த அவரை அந்தச் சாலைக் கட்டுமானப் பணியில் இருந்த ஊழியர்கள் குழியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

சாலைப் பணிகள் சட்டம், வேலையிடப் பாதுகாப்புச் சுகாதார சட்டம் (பொது விதிமுறைகள்), கட்டுமானக் கட்டுப்பாட்டுச் சட்டம் (BCA) உட்பட்ட சில சட்டங்களின்கீழ் அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

‘ஓஹின் கன்ஸ்டிரக்‌ஷன்’ நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட அந்த ஆறு நபர்களும் 11 விதமான வெவ்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

உரிமம்பெற்ற நிபுணத்துவத் தரம் வாய்ந்த அந்தக் கட்டுமான நிறுவனம் கட்டமைப்பு திட்டங்களுக்கு ஏற்ற முறையில் அங்குப் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யத் தவறியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

அதன்படி, பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலம் உறுதியாகவும் நிலைத்தன்மையாக இருப்பதற்கான பலவகை கட்டாயமாக்கப்பட்ட சோதனைகளை அந்த நிறுவனம் முறையாகச் செய்யவில்லை என்று அறியப்படுகிறது.

இதற்கிடையே புதைகுழி சம்பவ விசாரணையில் கட்டுமானக் கட்டுப்பாட்டு சட்டப்படி தேசிய தண்ணீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கும் (பியுபி) சர்பானா ஜூரோங் கன்சல்டன்ஸ் நிறுவனத்துக்கும் நிபந்தனையுடனான எச்சரிக்கை வழங்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டோர் விவரம்

ஓஹின் நிறுவனம் தற்காலிகமாகக் கலைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட தனிநபர்களில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐவன் ஓங் கியாவ் யாங் 64, கட்டுமானத் திட்டத்தின் இயக்குநர் ராஜ்குமார் நடராஜன் 58, திட்டத்தின் நிர்வாகி செல்லப்பன் சரவணகுமார் 35, ஆகிய மூவர் அடங்குவர்.

அவர்களுடன் ‘தேர்ச்சிபெற்றோர்’ என்று வகைப்படுத்தப்பட்ட கீ சென் சியாங் 39, யாவ் ட்ஸு யின் 49 ஆகிய இருவருடன் பணிக்கான பொறியாளர் செந்தில்நாதன் மதியழகன் 56, என்பவரும் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்