தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்கக் கயிற்றைப் பயன்படுத்திய ஊழியர்கள்

2 mins read
22b5b0fd-ebeb-4b02-ad11-701ed4647a85
கட்டுமானத்தள மேற்பார்வையாளர் பிச்சை உடையப்பன் சுப்பையா பெண்ணுக்குக் கயிற்றைக் கொடுக்குமாறு மூன்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தர்மன் சண்முகரத்னம், தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்ட திரு பிச்சை உடையப்பன் சுப்பையா உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அவர்கள் விரைவாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டதாக அதிபர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கட்டுமானத்தள மேற்பார்வையாளர் பிச்சை உடையப்பன் சுப்பையாவும் அவருடன் வேலை செய்த சிலரும் ஒன் ஆம்பர் கூட்டுரிமை வீடுகளுக்கு அருகில் உள்ள பியுபி வேலையிடத்தில் சனிக்கிழமை (ஜூலை 26) மாலை பெருஞ்சத்தத்தைக் கேட்டனர். சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்ற அவர்கள் தஞ்சோங் காத்தோங் ரோடு சௌத்தின் நடுப்பகுதியில் புதைகுழி ஏற்பட்டிருப்பதைக் கண்டனர். பள்ளத்திற்குள் கறுப்பு கார் ஒன்று விழுந்துகிடந்தது. அதிலிருந்து ஒரு பெண் வெளியே வருவதைத் திரு. சுப்பையா, 46, பார்த்தார்.

“காருக்குள் ஒரு பெண் இருந்தார். யாரோ உள்ளே விழுந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். உடனே உதவ வேண்டும் என்று விரும்பினேன்,” என்று திரு. சுப்பையா சொன்னார்.

பெண்ணை மேலே கொண்டுவர நைலான் கயிற்றை அவருக்குக் கொடுக்குமாறு சக ஊழியர்கள் மூவருக்கு அவர் உத்தரவிட்டார்.

ஓஹின் கட்டுமான நிறுவனத்திற்காக வேலை செய்யும் திரு சுப்பையா, மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்குள் அப்பெண்ணை மேலே கொண்டுவந்ததாகக் கூறினார். ஓஹின் நிறுவனம் அந்த வட்டாரத்தில் சாக்கடைத் திட்டமொன்றை மேற்கொள்கிறது.

தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி, சனிக்கிழமை மாலை 5.50 மணியளவில் புதைகுழி ஏற்பட்டதாகத் தெரிவித்தது. அதனால் இரண்டு போக்குவரத்துத் தடங்கள் உள்வாங்கின. அதற்கு முன்தினம் இரவு அந்த வட்டாரத்தில் தண்ணீர்க் குழாய் வெடித்ததாக வட்டாரவாசிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பள்ளத்தில் நீர் நிரம்பினாலும் ஊழியர்கள் பெண்ணை மீட்டபோது தண்ணீர் வடிந்துவிட்டது.

“யாரோ ஒருவர் விழுந்துவிட்டார். அவரை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அதுவே நோக்கமாக இருந்தது,” என்று திரு. சுப்பையா சொன்னார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. சுப்பையா சிங்கப்பூரில் 22 ஆண்டுகளாக வேலை செய்கிறார். அத்தகைய மீட்புப் பணியில் அவர் ஈடுபடுவது இதுவே முதன்முறை. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, கார் ஓட்டுநரைப் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.  

பெண்ணால் நடக்க முடிகிறது என்றும் அவருக்குக் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பியுபி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸி கீ (Gho Sze Kee) மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவருக்குத் தசை வலி இருப்பதாகவும் சொன்னார்.

மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ பெய் மிங்கும் (Goh Pei Ming) சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தார். நிலப்பகுதி தற்போது நிலையாய் இருப்பதாக பியுபி மதிப்பிட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்