சிங்கப்பூரின் பரபரப்பான சூழலிலிருந்து விலகி அமைதியான நகர்ப்புறப் பகுதிகளுக்கு இட்டுச்செல்லும் கலை விழாவிற்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிங்கப்பூரின் கலாசாரம், சமூகக் கூறுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த விழா தஞ்சோங் பகார் பகுதிக்குப் புத்துயிர் அளித்தது.
‘ஆர்ட்ஸ் இன் தி ஏலி’ எனப்படும் அந்தக் கலை விழாவிற்கு சிங்கப்பூரின் மரபையும் கொண்டாடும் வகையில் ‘8எம்’ சொத்துச் சந்தை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
சமூக உணர்வை வளர்த்தல், நகர்ப்புற இடங்களைப் புதிய கோணத்தில் பார்த்தல் போன்ற நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழா ‘8எம்’ சொத்துச் சந்தை நிறுவனத்தின் மூன்று முக்கிய சொத்துகளை மையமாகக் கொண்டது.
21 தஞ்சோங் பகார் சாலை, அன் சியாங் ஹவுஸ் விடுதி, கேசா விடுதி ஆகிய இடங்கள் வாரயிறுதி முழுவதும் புதிய அனுபவங்களை வழங்கும் துடிப்பான மையங்களாக மாறின.
கலை விழாவில் பங்கேற்றவர்கள் பல்லுணர்வியல் சார்ந்த, கலை, நிழல் பொம்மலாட்டம், திரைக்கதை எழுதுதல், நடிப்புக்கான சிறப்புப் பயிற்சி, கவிதை அரங்கேற்றம், மரபுக் கதைகளை அறிந்துகொள்ளுதல் போன்ற அனுபவங்களைப் பெற்றனர்.
இதில் முக்கிய அங்கமாக 21 தஞ்சோங் பகார் சாலையின் பின்புறச் சந்தில் சுவரோவியம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.
சனிக்கிழமை (16 ஆகஸ்ட்) நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஃபூ சசியாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சுவரோவியத்தை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த இடங்களில் வரலாற்றுக்கூறுகள் பல நிறைந்துள்ளன. அவற்றை நாம் அப்படியே விட்டுவிட்டால் இளைய தலைமுறையினருக்கு மறந்து போய்விடும். நம் மூதாதையர்களின் கதைகளை வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் வாழ்ந்த இடங்கள் இவை,” என்று திரு ஃபூ சசியாங் தெரிவித்தார்.
கலை விழாவிற்கு மெருகூட்டும் விதமாகச் சிங்கப்பூரின் பாரம்பரியச் சுவைகளைக் கொண்டு அவர்களது உணவகங்களில் தனித்துவமான உணவுத் தொகுப்பை உருவாக்க ‘8எம்’ நிறுவனத்தின் வாடகைதாரர்கள் ஒன்றுகூடினர்.
மாட்டிறைச்சி ரெண்டாங், ஆசிய கோழி டாக்கோஸ், பக்குத்தே, சில்லி கிராப் போன்ற உணவு வகைகள் வழங்கப்பட்டன. கலை விழா ஞாயிற்றுக்கிழமை (17 ஆகஸ்ட்) நிறைவுபெறுகிறது.
“கலை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எங்கள் முதன்மை நோக்கம். இது நாங்கள் எடுத்துள்ள முதல் படி. இந்த முனைப்பைச் சிங்கப்பூரின் மேலும் பல இடங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது இலக்கு,” என்றார் ‘8எம்’ நிறுவனப் பிரதிநிதி நசீமா ஹூக், 43.

